வீடுதேடிச் செல்லும் நூலகம்! வாசிப்புப் புரட்சியை உருவாக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!
ஆம்பூர் அருகே மொபைல் நூலகம் மூலம் வாசிப்புப் புரட்சியை உருவாக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் பற்றி...

Dinamani
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், நகராட்சி நடுநிலைப் பள்ளி – பெத்லகேம், ஆம்பூர் பள்ளியின் ஆசிரியர் ச. சரவணன், கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், சமூக அக்கறையுடன் “மொபைல் நூலகம் (Mobile Library – Read • Learn • Grow)” என்ற புதுமையான முயற்சியை செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆம்பூர் அருகே உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வாசிப்புத் திறன், மொழித்திறன் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கில், இருசக்கர வாகனத்தில் சிறிய மொபைல் நூலகத்தை உருவாக்கி, நேரடியாக அவர்களது குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று சேவையாற்றி வருகிறார்.
மொபைல் நூலகத்தில் சிறுவர் சிறுகதைப் புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு நூல்கள், அறிவியல் நூல்கள், பொது அறிவு நூல்கள், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், குழந்தைகளுக்கான இதழ்கள் உள்ளிட்ட பல்வேறு வாசிப்பு வளங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கவும், குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டிற்கு எடுத்துச் சென்று குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து படிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், நாளிதழ்களை மாணவர்கள் சப்தமாக வாசிக்கும் “செய்தி வாசிப்பு”, சிறுகதைகளைப் படித்து அதன் கருத்துகளைப் பகிரும் “கதை பகிர்வு”, புதிய சொற்களை அறியும் “சொல்வளம் வளர்ப்பு”, வாசித்த நூலின் சாராம்சத்தை விளக்கும் “Book Talk”, பெற்றோர்களுடன் இணைந்து குடும்ப வாசிப்பு போன்ற செயல்பாடுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
கல்வியில் பின்தங்கும் அபாயம் உள்ள சமூகங்களை நேரடியாக சென்றடைந்து, “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகம் – ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வாசிப்பாளர்” என்ற இலக்கை நோக்கி இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக, பள்ளி நேரத்திற்கு வெளியிலும் மாணவர்கள் புத்தகங்களுடன் தொடர்பில் இருக்கவும், கைப்பேசி பயன்பாட்டிலிருந்து வாசிப்புப் பழக்கத்திற்கு அவர்களை ஈர்க்கவும் இந்த மொபைல் நூலகம் பெரிதும் உதவி செய்து வருகிறது.

இம்முயற்சியின் மூலம் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் மாணவர்களிடையே வாசிப்பின் மீதான ஆர்வம், புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளும் திறன், தன்னம்பிக்கையுடன் பேசும் திறன், நாளிதழ் வாசிக்கும் பழக்கம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருவதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டின் சிறந்த முன்மாதிரியாக இந்த மொபைல் நூலகத் திட்டம் திகழ்கிறது.
Summary
Mobile library to doorstep - A government school teacher sparking a reading revolution
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


