டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

121 விதை நெல் ரகங்களைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!

பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் இயற்கை விவசாயி பற்றி...

siddhar

கோ. சித்தர் - Dinamani

Published On :

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை மருத்துவரும், முன்னோடி இயற்கை விவசாயியுமான கோ. சித்தர் (67). ஏறத்தாழ 25 ஏக்கரில் பாரம்பரிய விதை நெல் ரகங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறார். இதன் மூலம் 100-க்கும் அதிகமான பாரம்பரிய விதை நெல் ரகங்களைப் பாதுகாத்து வருகிறார். இவருக்கு 2023 - 24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த இயற்கை விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்தது:

“நானும் தொடக்கத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட வீரிய ரகங்களையே பயிரிட்டு வந்தேன். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு, அறுவடைக்கு இன்னும் 20 நாள்களே இருந்த நிலையில், பூச்சித் தாக்குதலால் 25 ஏக்கர் பயிரையும் முழுமையாக இழந்தேன். அதுவே என் விவசாய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அடுத்த ஆண்டிலேயே பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடத் தொடங்கினேன். மாற்று வழிகளைத் தேடியபோது, பூச்சித் தாக்குதல், வெள்ளம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பாரம்பரிய ரகங்களைப் பயிரிட முடிவு செய்தேன். மேலும், பாரம்பரிய நெல் ரகங்களில் பல மருத்துவக் குணங்களும் உள்ளன. "பாரம்பரிய ரகங்களுக்கு மாறுவதற்கு நான் சிறிய நிலப்பரப்பில் பரிசோதனை எதுவும் செய்யவில்லை; மாறாக, எனது 25 ஏக்கர் பண்ணை முழுவதிலும் பாரம்பரிய ரகங்களையே விதைத்தேன். அதன்பிறகு ஒருபோதும் பின்னோக்கிப் பார்க்கவில்லை.

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்தேன். உளுந்தூர்பேட்டையில் உள்ள சாரதா ஆசிரமம் உள்ளிட்ட பண்ணைகள் மற்றும் பல இடங்களிலிருந்து நான் விதைகளைப் பெற்றேன். வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய 'மாடு முழுங்கி', 'குள்ளங்கார்', 'வரப்புக் குடைஞ்சான்', 'சீரகச் சம்பா' போன்ற சில ரகங்களுடன் சாகுபடியைத் தொடங்கினேன்.

கடந்த 29 ஆண்டுகளில் 121 வகையான பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டுள்ளேன். இந்த நெல் ரகங்களைப் பாதுகாத்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக நிலவும் சாதகமற்ற வானிலை காரணமாக பயிரிடப்படும் ரகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 85 ரகங்களைப் பயிரிட்டேன். தற்போதுள்ள தாளடிப் பருவத்தில், 'தூய மல்லி', 'கிச்சடி சம்பா', 'சீரகச் சம்பா' ஆகிய 3 ரகங்களுக்கான நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. "இம்மூன்று ரகங்களும் பண்ணையின் முக்கியப் பகுதிகளில் பயிரிடப்படும். இதுதவிர, விதை வங்கியைப் பராமரிக்கும் நோக்கில், ஒரு ஏக்கர் பரப்பளவில் 60 வகையான நெல் ரகங்களை விதைக்கவுள்ளேன்.

பாரம்பரிய நெல் ரகங்களைத் தானே பயிரிடுவதுடன், 2000-ஆம் ஆண்டு முதல் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு அவற்றை விநியோகிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறேன்.

ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ நெல் விதை இலவசமாக வழங்கப்படும். அதற்கு, அறுவடைக்குப் பிறகு 2 கிலோ நெல்லைத் திரும்பத் தர வேண்டும் என்பது நிபந்தனை. பலரால் நெல்லைத் திரும்பக் கொண்டு வந்து ஒப்படைக்க இயலாத சூழல் இருந்ததால், அந்த ஒரு கிலோ விதையைப் பெற்ற விவசாயி, தலா ஒரு கிலோ விதையை வேறு இரண்டு விவசாயிகளுக்கு வழங்கிவிட்டு, அவர்களின் முகவரிகளைத் தனக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டேன்.

இதுவரை ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு விதைகளை விநியோகித்துள்ளேன். இந்த ஆண்டில் இதுவரை 25 விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தங்களுக்குள் விதைகளைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் இல்லாமல் போனது. இப்போதெல்லாம் விவசாயிகள் தங்கள் விதைகளைப் பெறுவதற்கு அரசு கிடங்குகளைத் தேடிச் செல்கின்றனர்.

ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு விதைகளை விநியோகிப்பதுடன், இயற்கை விவசாயம் மற்றும் இயற்கையான மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறேன். "விவசாயிகள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் மாதம் ஒருமுறை விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்பாடு செய்கிறோம். ஏற்கனவே தனது பண்ணையில் மூன்று மீன் குட்டைகளை அமைத்து, பண்ணை நடவடிக்கைகளை பல்வகைப்படுத்தத் தொடங்கியுள்ளேன்.

நிகழாண்டு, 'உயர்த்தப்பட்ட பாத்தி' முறையில் காய்கறி சாகுபடி செய்யும் முயற்சியைத் தொடங்கியுள்ளேன். டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வசதி கொண்ட நிலங்களில் அதிக நீர் தேங்கி காய்கறிப் பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதால், பொதுவாக மழைநீரை மட்டுமே நம்பியிருக்கும் நிலங்களில்தான் காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன. எனவே, நான் உயர்த்தப்பட்ட பாத்தி முறையில் காய்கறி சாகுபடி செய்வதை ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.

அவர் ஏற்கெனவே தனது பண்ணையில் 800 தேக்கு மரங்களை நட்டுள்ளார். மேலும், மீன் குட்டைகளின் வரப்புகளில் பலா மரங்களை நடவும் திட்டமிட்டுள்ளார்.

Summary

An organic farmer who is preserving 121 varieties of paddy seeds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.