சட்டப்பேரவை நேரலை... சாதகமா... பாதகமா...?
தமிழக சட்டப்பேரவையின் நேரலை நிகழ்வுகளின் சாதகம், பாதகம் பற்றி...
தமிழக சட்டப்பேரவையின் நேரலை நிகழ்வுகள் பட்டிதொட்டி முதல் உலகம் முழுவதும் காணும் வகையில் மக்கள் மன்றமாக மாறியுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் ஜெயலலிதா பேரவையில் ஆற்றும் உரை ஜெயா தொலைக்காட்சியிலும், திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதியின் உரை கலைஞர் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன. அதில், அமைச்சர்களின் பதில்களோ, எம்எல்ஏக்களின் கோரிக்கைகளோ இடம்பெறாது.
பின்னர், முந்தைய திமுக ஆட்சியில் முதலில் தொடங்கும் கேள்வி நேரம் மட்டும் நேரலை செய்யப்பட்டது. அதன் பின்னர் நடைபெறும் அவை விவாதங்களில் ஆளும் தரப்பினர் பேசும் பேச்சுகளின் விடியோ பதிவு மட்டும் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புமுதல் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடர் வரையில் சட்டப்பேரவையின் முழு நேரமும் நேரலையாக வெளியாகி வருகிறது.
நேரலையின் சாதகங்கள்: நேரலையை மக்கள் கண்காணித்து வருவதால் தங்கள் தொகுதியின் பிரச்னைகளை முன்வைத்துப் பேச வேண்டும் என அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் ஆர்வத்துடன் அவையில் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
முந்தைய ஆட்சிகளில் மாலை நேர விவாதங்களின்போது அவையில் முழு அளவிலான உறுப்பினர்கள் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். ஆனால், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் காலை 9.30 மணி முதல் மாலை 7.20 மணி வரை சட்டப்பேரவை தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் நடைபெறும்போதிலும் அவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
இளம் தவெக அமைச்சர்கள் பதிலளிக்கும்போது எதிர்தரப்பில் திமுக, அதிமுக மூத்த முன்னாள் அமைச்சர்கள் இரவு 7 மணியானாலும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆளும் கட்சி அமைச்சர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக அடுத்த நொடியே பதில் அளிக்கும் கட்டாயத்துக்கு திமுக, அதிமுகவினர் தள்ளப்பட்டுள்ளதற்கு நேரலையே காரணம்.
அந்த நேரத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எதிர்க்கட்சியினர் எழுந்துநின்று எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர். குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தே ஆக வேண்டும் என்று அவையில் அமர்ந்திருப்பதால், முந்தைய கூட்டத் தொடர்களில் காணப்பட்ட எதிர்க்கட்சியினரின் தினசரி வெளிநடப்பு சம்பவங்கள் இப்போது குறைந்துவிட்டன. தற்போது வரையில் அதிமுக ஒருமுறையும், திமுக இரண்டு முறையும் வெளிநடப்பு செய்துள்ளன.
பேரவைத் தலைவரின் சாமர்த்தியம்: இதற்கு கடுமையான விவாதங்கள் எழும்போது ஆளும் கட்சியினருக்கு நிகராக எதிர்க்கட்சியினருக்கும் பேச வாய்ப்பளித்து அவையை அமைதியாக்கும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரின் சாமர்த்தியம் முக்கியமானது.
சில நேரங்களில், சர்ச்சை பேச்சுகளால் ஏற்படும் அமளியைத் தடுக்க ஆளும் அமைச்சர்களுக்கே வாய்ப்பளிக்காமல் அவர் அமரச் செய்தும், அவர்கள் பேசும் சில வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கியும் ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும் நடவடிக்கை எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
சட்டப்பேரவை நேரலையை சமூக ஊடகத்தில் காண்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடம் அரசியல் புரிதலையும், ஜனநாயகத்தின் நம்பிக்கை வேரையும் வலுப்படுத்தி வருவதை உறுதி செய்கிறது.
பாதகங்களும்... சவால்களும்... ஏட்டிக்குப் போட்டியாக ஆளும், எதிர்தரப்பினர் பேசும் அவையில் இடம்பெற முடியாத வார்த்தைகளும், அமளியின்போது மிரட்டல் விடுக்கும் சைகைகளும் நேரலையில் அப்படியே ஒளிபரப்பாவது பாதகங்களாக உள்ளன. சிறுவர்கள் முதல் இந்த நேரலையைக் காண்பதால் அரசியல்வாதிகள் மீதான அவர்களின் அபிப்பிராயம் என்னவாகும் என்பதை அனைவரும் அறிவர்.
ஆதாரமற்ற உண்மைக்கு மாறான தகவல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள் ஆகியவற்றை பேரவைத் தலைவர் அவைக் குறிப்பில் இருந்து பின்னர் நீக்கினாலும், நேரலையில் ஒளிபரப்பாகிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சில உறுப்பினர்கள் சர்ச்சை குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பதுண்டு. அவை முடிந்து எம்எல்ஏக்கள் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பே அந்த சர்ச்சை பேச்சு "ரீல்ஸாக' பரவி கேலி, கிண்டல் என மாற்றப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்குச் சென்றடைந்துவிடுகிறது. இதை முற்றிலும் தடுப்பது சாத்தியமற்றதாக உள்ளது.
மேலும், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதை மட்டும் நேரலையில் காண்பிப்பதாக திமுக குற்றம்சாட்டுகிறது.
"காதில் கேட்கக் கூடாத வார்த்தைகளைப் பேசுகிறீர்கள். நேரலையில் பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள்' என வருத்தம் தெரிவித்தும், அமளியின்போது ஆக்ரோஷமாக இருக்கையைவிட்டு எழுந்து மையப் பகுதிக்கு வந்தால் வெளியேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள் என எச்சரித்தும் விட்டார் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர். ஆனாலும் இந்த நிலை தொடர்கிறது.
இதைக் கட்டுப்படுத்த நேரலையை 15 நிமிஷங்கள் தாமதமாக ஒளிபரப்பி, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளை சப்தமின்றி (மியூட்) வெளியிடுவதற்கு தவெக அரசு ஆராய்ந்து வருகிறது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டி தேவையானவற்றை மட்டும் வெளியிடுவதால் ரீல்ஸ்கள் வெளியாவதைத் தடுப்பது சாத்தியமற்றது. இது ஜனநாயக குரல்வளையை நசுக்கும் செயலாகும் என்ற கருத்தும் நிலவுகிறது.
நாடாளுமன்ற நேரலை... நாடாளுமன்றத்தில் இரு அவை உரை 1990-களிலும், மக்களவை கேள்வி நேரம் 1992-களிலும் நேரலை தொடங்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டுமுதல் இதற்கென தனியாக இரு தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு, 2021 முதல் ஒரே "சன்சத்' தொலைக்காட்சியாக மாற்றப்பட்டு நேரலை செய்யப்படுகிறது. நேரலை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு செயல்படுவதாக முன்னாள் மக்களவை செயலகச் செயலர் பால் சேகர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை நேரலை சர்ச்சை குறித்து அவர் கூறுகையில், "சட்டப்பேரவை நிகழ்வுகளை உடனடியாக "எடிட்' செய்து வெளியிடும் தொழில்நுட்பம் பேரவைக்கு சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறிதான். ஏன் என்றால் பேரவைத் தலைவர் அவையை நடத்துவாரா அல்லது அவை நடவடிக்கை விடியோவில் இருந்து சர்ச்சையான பகுதிகளை நீக்க உத்தரவிடுவாரா?
அவையில் இடம்பெறாத வார்த்தைகளை பேரவைத் தலைவர் நீக்கலாம், அவற்றை அவைக் குறிப்பில் இடம்பெறாமல் செய்யலாம். மேலும், நேரலை குழுவை அமைத்து இதற்கான நெறிமுறைகளை வகுக்கலாம்.
நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டால் மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவரை மட்டும் கேமராவில் காண்பிக்க வேண்டும், அமளியில் ஈடுபடும் உறுப்பினர்களை நெருக்கத்தில் காண்பிக்கக் கூடாது என்று நேரலைக்கு நெறிமுறைகளும், அதை வகுக்க குழுக்களும் உள்ளன. அந்தக் குழுக்கள் அவ்வப்போது பரிந்துரைகளை அளிக்கும்' என்றார்.
தமிழக சட்டப்பேரவை நேரலை நெறிமுறைகளை வகுத்தும், பாரம்பரிய மிக்க அவையின் மாண்பைக் காக்க அனைத்து உறுப்பினர்களும் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் ஆரோக்கிய விவாதத்துடன் நேரலை உயிர்ப்புடன் இருக்கும். இல்லையென்றால் சட்டப்பேரவைக் கூட்டமும் பொதுக் கூட்டமாக மாறிவிடும்.
கேரள பேரவையின் 'சபா டிவி': கேரள சட்டப்பேரவை 'சபா டிவி' என்ற பிரத்யேக ஓடிடி/தொலைக்காட்சி சேனல் மூலமாக அவை நடவடிக்கைகளை ஒளிபரப்புகிறது. எனினும், அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கேமராவில் காண்பிக்காமல், பேரவைத் தலைவரை மட்டுமே காட்டுவதாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
கர்நாடக பேரவையில் விடியோ கட்டுப்பாடு: கர்நாடக சட்டப்பேரவையில் தனியார் செய்தி நிறுவனங்களின் கேமராக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பேரவை செயலகமே அதிகாரபூர்வ விடியோவை ஊடகங்களுக்கும் யூடியூப்பிற்கும் வழங்கி வருகிறது.
மாறாத குஜராத்: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் நேரலைக்கு மாறிவிட்ட நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவை மட்டுமே இன்னமும் தனது அன்றாட நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்யாமல் உள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கு அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆந்திர பிரதேசத்தில்... ஆந்திர சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் மற்றும் கேள்வி நேரங்கள் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. எனினும், அவையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடும்போது கேமராக்கள் பேரவைத் தலைவரை நோக்கி மட்டுமே திருப்பப்படுகின்றன.
தெலங்கானாவில் முழு நேரலை: தெலங்கானா மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலை வழங்கப்படுகிறது. ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் உள்ள முக்கியத் தலைவர்களின் காரசார விவாதங்கள் மற்றும் கேள்வி நேர பதில்கள் முழுமையாக ஒளிபரப்பப்படுவதால், சமூக வலைதளங்களில் தெலங்கானா சட்டப்பேரவை நிகழ்வுகள் அதிகப் பார்வையாளர்களைப் பெறுகின்றன.
மகாராஷ்டிரத்தில்... மகாராஷ்டிர சட்டப்பேரவை நாடாளுமன்றத்தைப் பின்பற்றி, அவையில் எழும் தொடர் அமளிகள் அல்லது பேரவைத் தலைவரால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துக்கள் நேரலையில் வராத வண்ணம் கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளுடன் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
Summary
Live broadcast of Assembly proceedings... Advantage or disadvantage?
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




