கர்நாடக அரசைக் கண்டித்து காரைக்காலில் முழு கடையடைப்புப் போராட்டம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடகத்தில் தமிழர்களுக்கெதிரான  நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில், காரைக்காலில் வெள்ளிக்கிழமை முழு

கர்நாடகத்தில் தமிழர்களுக்கெதிரான  நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில், காரைக்காலில் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல், ரயில் மறியல், பேருந்து உள்ளிட்ட கார், வேன், ஆட்டோ இயக்கமின்மையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிóட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. பேருந்து, லாரிகள் எரிப்பு, தமிழர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

இதனை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு, புதுவையில் வணிகர்கள் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பிவிடுத்திருந்தனர்.

காரைக்காலில் சேம்பர் ஆஃப் காமர்ஸ், விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர். இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. காரைக்கால் நகரப் பகுதி மற்றும் திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. காரைக்கால் நேரு மார்க்கெட் மூடப்பட்டன. மீன் விற்பனை சந்தையில் நடைபெறவில்லை. 

பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது. புதுச்சேரி அரசுப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை.  தமிழக அரசுப் பேருந்துகள் ஒரு சில இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களும் இயக்கப்படவில்லை. அரசுத்துறைகள், அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன.  சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் நலனுக்காக விடுமுறை அறிவித்தன. பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாயினர்.   கடையடைப்பு  போராட்டத்தால் காரைக்காலில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  பேருந்துகள் இயக்கமின்மையால் காரைக்கால் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. 

விவசாய சங்கத் தலைவர் கோரிக்கை : காரைப் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் பி.ராஜேந்திரன் கூறும்போது, காரைக்காலில் நடத்தப்பட்ட போராட்டம் முழு வெற்றிபெற்றது. அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளித்தமைக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேட்டூர் அணை வரும் 20-ஆம் தேதி திறக்கப்படுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி திறக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. இந்த அளவு திறக்கப்பட்டால் காரைக்கால் போன்ற கடைமடைப் பகுதிக்கு உரிய தண்ணீர் வந்து சேராது. இதனை 20 ஆயிரம் கன அடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் முறைவைப்பு பாசனமின்றி தண்ணீர் தரவேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்கு உரிய காவிரித் தண்ணீர் தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து புதுச்சேரி அரசு, அம்மாநில அரசுடன் பேசி காரைக்கால் விவசாயிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்தவேண்டும். 20 ஆயிரம் கன  அடி திறப்பின்றி, முறைவைப்பு பாசனம் செய்யப்படும்பட்சத்தில், காவிரித் தண்ணீர் வந்தும் காரைக்கால் விவசாயிகளுக்கு எந்த பயனுமிருக்கப்போவதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com