ஒரே வெட்டில் 4560 மரங்கள் உயிர் பிழைத்தன: மரங்களைக் காப்பதில் உச்சநீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை!

வருடத்தில் 2 மாத நீதிமன்ற விடுமுறைகளைக் கணக்கிடாமல் வேலை நாட்களான 10 மாதங்களை மட்டுமே கணக்கிட்டால் கூட சுமார் 4,560 மரங்கள் நீதிமன்றக் காகிதப் பயன்பாடுகளுக்காக தங்களது ஆயுளை இழக்கின்றன என்பது உறுதி.
ஒரே வெட்டில் 4560 மரங்கள் உயிர் பிழைத்தன: மரங்களைக் காப்பதில் உச்சநீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை!
Updated on
2 min read

உச்சநீதிமன்ற வழக்கு விவகாரங்களைப் பதிவு செய்ய இனி காகிதம் பயன்படுத்தப்பட மாட்டாது. இனி ஆறு மாதங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் காகிதங்களுக்குத் தடா என அறிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற நடைமுறைப் பயன்பாடுகளில் காகிதங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் மரங்களின் ஆயுளை நீட்டிப்பதற்காக இனிமேல் அவை தவிர்க்கப்பட வேண்டியவையே எனும் முடிவில் உச்சநீதிமன்றம் தற்போது காகிதப் பயன்பாட்டை சுத்தமாக வெட்டி நீக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. 

ஒவ்வொருநாளும் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளைப் பதிவு செய்வதற்கும், தீர்ப்புகளை அச்சில் வெளியிடுவதற்கும், நீதிமன்றம் சார்ந்த பல்வேறு கோப்புகளையும், தஸ்தாவேஜுகளையும் உருவாக்கவும் தேவையான காகிதங்களைத் தயாரிக்க 20 மரங்கள் வரை ஆயுளை இழந்து கொண்டிருந்தன. கடந்த மாதத்தில் உச்ச நீதிமன்ற நிர்வாக விவகாரங்களுக்கான கவுன்சில் குழுவினருடனான பேச்சுவார்த்தைகளின் போது இன்றிலிருந்து இனி 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற விவகாரங்களில் காகிதங்கள் பயன்படுத்தப் பட மாட்டாது என அறிவித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ஜெ எஸ் கேஹர். தலைமை நீதிபதியின் உத்தரவு தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை இனிமேல் காகித பண்டில்களுடனான உறவு என்பது பழங்கதை ஆகப்போகிறது. குவியல், குவியலாக காகிதக் கட்டுகளும், வழக்கு வரலாறுகள் வெளியிடப்படும் அச்சுக் காகிதங்களுமாக காட்சி அளிக்கும் நீதிமன்ற வளாகம் இனி முழுவதும் டிஜிட்டல் மயமாகவிருக்கிறது. அதற்கான முன் நடவடிக்கையாகத் தான் இந்த 6 மாத வெள்ளோட்டம். 

உச்சநீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டிலேயே இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தாலும் கூட வழக்காளர்கள் மற்றும் வழக்குரைஞர்களில் பலருக்கு இந்த டிஜிடைசேஷன் முறை கடினமாகத் தெரிந்ததால் மின்னணுத் தகவல் பதிவு முறை பரவலாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆனால் கீழ் கோர்ட்டுகளில் இந்த நடைமுறை இப்போதும் பின்பற்றப் பட்டு வருவதால் இதுவரை ஆயிரக் கணக்கான மரங்கள் காப்பாற்றப் பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து முன்னரே விடுக்கப்பட்ட தனது உத்தரவை எண்ணி விழித்துக் கொண்ட உச்சநீதிமன்றம் தற்போது முழு வேகத்தில் செயல்பட்டு மரங்களின் ஆயுள் காக்கும் முயற்சியை முழு வேகத்தில் கையிலெடுத்திருகிறது. அதன்படி இன்றிலிருந்து இனி 6 மாதங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளைப் பதிவு செய்யும் முறையில் இனி மின்னணுத் தகவல் பதிவே பின்பற்றப் படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 நாளொன்றுக்கு உச்சநீதிமன்றத்தில் தோராயமாக 500 பெட்டிஷன் மனுக்களும், அவற்றுக்கான இணைப்பு மனுக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இந்த மனுக்கள் ஒவ்வொன்றும் 400 பக்கங்கள் கொண்டவை. அதுமட்டுமல்ல சம்மந்தப் பட்ட வழக்காளர்களின் வசதிகளுக்காக அவை மேலும் அதிக அளவில் நீதிமன்ற வளாகத்தில் படிகளும் எடுக்கப்படும். பழைய வழக்குகளாக இருந்தால் புதிதாகத் தாக்கல் செய்யப்படும் காகிதங்களோடு பழையவையும் படி எடுக்கப்பட்டு சேர்க்கப்படும். எனவே ஒவ்வொரு வழக்கு விவரக் கட்டுமே சுமார் 400 பக்கங்களுக்கு குறைவில்லாமல் காகிதப் பயன்பாடு இருக்கும்.

ஒரு மரத்திலிருந்து தோராயமாக 16.67 ரீம்கள் நகல் காகிதங்களையோ அல்லது 8,333.3 A4 சைஸ் காகிதங்களையோ தயாரிக்க முடியும். ஆனால் நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் காகிதங்களைப் பொறுத்தவரை அவை A3 சைஸ் கொண்டவை என்பதால் அவற்றை தயாரிக்க 500 ரீம்கள் கொண்ட காகித நகல் தேவைப்படும். இந்த முறையில் உச்சநீதிமன்றம் நாள்தோறும் 1,61,000 பக்கங்கள் கொண்ட பெட்டிஷன்களைப் பதிவு செய்ய வாரத்துக்கு 114 மரங்களை கபளீகரம் செய்து வந்தது. அந்த வகையில் பார்த்தால் தொடர்ந்து ஒரு மாதம் நீதிமன்றத்தில் இடைவிடாது வழக்கு தொடர்பான பதிவு வேலைகள் நடந்தால் அதற்கு மாதத்திற்கு 456 மரங்கள் தேவைப்படும். வருடத்தில் 2 மாத நீதிமன்ற விடுமுறைகளைக் கணக்கிடாமல் வேலை நாட்களான 10 மாதங்களை மட்டுமே கணக்கிட்டால் கூட சுமார் 4,560 மரங்கள் நீதிமன்றக் காகிதப் பயன்பாடுகளுக்காக தங்களது ஆயுளை இழக்கின்றன என்பது உறுதி.

ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி இனி நீதிமன்ற நடைமுறைகளில் பின்பற்றப்படவிருக்கும் டிஜிட்டலைசேஷன் முறையில் காகிதங்கள் பயன்படுத்தத் தேவையே இல்லை. அனைத்து வழக்கு விவகாரங்களுக்கும் மின்னணுப் பதிவுகள் போதும். பழைய, புதிய வழக்குகள், அவற்றின் பின் இணைப்புகள் அனைத்தையும் மின்னணு முறையில் கோப்புகளாக்கி சேமித்துப் பயன்படுத்தலாம். காகிதங்களுக்காக மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com