திருவையாறு அருகே பூமிக்கு அடியில் 5 அடி பிரம்மா சிலை கண்டுபிடிப்பு!

பூமிக்கடியில் இடறும் அந்தப் பொருள் என்னவாக இருக்குமென்ற ஆர்வத்தில் அவர்கள் மேலும் நிலத்தைத் அகலமாகத் தோண்டியதில் 5 அடி உயர பிரம்மா சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது.
திருவையாறு அருகே பூமிக்கு அடியில் 5 அடி பிரம்மா சிலை கண்டுபிடிப்பு!

திருவையாற்றுக்கு அருகில் வீரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜராஜன்(33) எனும் விவசாயி தனது தென்னந்தோப்பில் புதிதாக தென்னங்கன்றுகள் வைப்பதற்காக நிலத்தை அகழ்ந்த போது நிலம் தோண்டும் இயந்திரத்தின் நுனியில் கடினமான பொருளொன்று இடறியுள்ளது. பூமிக்கடியில் இடறும் அந்தப் பொருள் என்னவாக இருக்குமென்ற ஆர்வத்தில் அவர்கள் மேலும் நிலத்தைத் அகலமாகத் தோண்டியதில் 5 அடி உயர பிரம்மா சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. கண்டெடுக்கப் பட்ட சிலையில் நான்கு முகங்கள் இருந்த காரணத்தால் அது நான்முகனான பிரம்மா சிலை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிலை கிடைத்த செய்தியை நிலத்தின் உரிமையாளரான ராஜராஜன் உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி ரஜேஷ் கன்னாவுக்கு தெரியப்படுத்தவே அவர் அச்செய்தியை உடனடியாக திருவையாறு தாசில்தாரான லதாவுக்கு தெரியப் படுத்தினார். அவரது உத்தரவின் பேரில் நடுகாவேரி காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் சிலரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தற்போது சிலை கிடைத்த இடத்துக்கு விரைந்து விவரங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னங்கன்றுக்காக நிலத்தைத் தோண்டிய போது கிடைத்த பிரம்மா சிலை தற்போது வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் சிலையின் வயதையும் அது உருவான காலகட்டத்தையும் அறிய தொல்லியல் துறையின் உதவியை நாடியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com