மக்களவை சபாநாயகராகப் பொறுப்பு வகித்த முதல் கம்யூனிஸ்ட் சோம்நாத் சாட்டர்ஜி பதவி நெருக்கடி குறித்து மனம் திறந்தது...

மக்களவை சபாநாயகராக இருந்த போது என் டி டி விக்கு அளித்த நேர்காணலொன்றில் சபாநாயகராக இருப்பதென்பது மிகவும் டார்ச்சரான வேலைகளில் ஒன்று என்று குறிப்பிட்டார்.
மக்களவை சபாநாயகராகப் பொறுப்பு வகித்த முதல் கம்யூனிஸ்ட் சோம்நாத் சாட்டர்ஜி பதவி நெருக்கடி குறித்து மனம் திறந்தது...

2004ம் ஆண்டில் தொடங்கி 2009ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களவை சபாநாயகராக பணியாற்றியவர் மறைந்த சோம்நாத் சாட்டர்ஜி. 

அவர் மக்களவை சபாநாயகராக இருந்த போது என் டி டி விக்கு அளித்த நேர்காணலொன்றில் தனது சபாநாயகர் பதவி மற்றும் பொறுப்பு குறித்துப் பேசுகையில், சபாநாயகராக இருப்பதென்பது மிகவும் டார்ச்சரான வேலைகளில் ஒன்று என்று குறிப்பிட்டது அப்போது ஊடகங்களில் மிகவும் கவனம் பெற்றதொரு கூற்றானது. 

“நாடாளுமன்றத்தில் அவைச் செயல்களை நடத்த விடாமல் தடுப்பதற்கு இப்போது நூதனமான புதிய நடைமுறைகளைக் கையாள்கிறார்கள். எதிர்கட்சிகளை பேச விடாமல் ஆளுங்கட்சி அமளி செய்தால் உடனடியாக சபை நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவித்து உடனடியாகத் தாங்கள் அவையைப் புறக்கணிப்பதாகக் கூறி எழுந்து சென்று விடுவோம் என்று மிரட்டுவதை பல தலைவர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். மக்களவை என்பது மக்களுக்கான நலத்திட்டங்களைப் பற்றிப் பேச வேண்டிய இடமே தவிர சொந்தப் பகைகளை தீர்த்துக் கொள்ள வேண்டிய இடம் அல்ல என்பது பலருக்குத் தெரியாமல் போய் விடுவது துரதிருஷ்டமானது. ஒரு முறை எதிர்கட்சித் தலைவரொருவர் காலையில் நேரிடையாக எனக்குத் தொலைபேசியில் அழைத்து,  ‘இன்று நாங்கள் அவை நடவடிக்கைகளை முடக்குவதாக இருக்கிறோம் என்று தெரிவித்தார், நான், ‘ஏன் அப்படி?’ என்றேன். அதற்கு அவரளித்த பதில், இல்லை, நாங்கள் முன்னதாக இன்று அவை நடவடிக்கைகளை முடக்குவது என்று முடிவு செய்து விட்டோம்’ அதனால் அவையை செயல்பட விடாமல் முடக்கத்தான் போகிறோம் என்றார். 

இதை அறிந்ததும் நான் பிரபல பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நியூஸ் பேப்பர் உரிமையாளர்களுக்கெல்லாம் தொலைபேசியில் அழைத்து இப்படிச் சொன்னேன். தயவு செய்து உங்களது ஊடகங்களில் இன்று நீங்கள் மக்களவை முடக்கம் குறித்துப் பெரிதாக பப்ளிசிட்டி செய்யாதீர்கள், இப்படிச் செய்வதால் அம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவோருக்கு மேலும் அரசியல் முக்கியத்துவம் கிடைத்து அவர்களது டிமாண்டுக்கள் அதிகரித்து விடுகின்றன. அவர்களது கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கு கிடைக்கும் முக்கியத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களவையில் அது ஒரு முக்கியமான பேசுபொருளாகி விடுகிறது. இது ஆரோக்யமானதில்லை. இதனால் உண்மையில் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான வகையில் முன்னெடுக்கப் படும் பல நல்ல விவாதங்களும், கேள்விகளும், விளக்க உரைகளும் கவனம் பெறாமல் பத்தோடு பதினொன்றாகி விடுகின்றன. என்று நானே தனிப்பட்ட முறையில் பலரிடம் பல சந்தர்பங்களில் கேட்டுக் கொள்ளும் படி ஆகியிருக்கிறது. இம்மாதிரியான அவை நடவடிக்கைகளை ஒரு சபாநாயகராக தீர்த்து வைப்பதென்பதைத் தான் நான் டார்ச்சரான வேலை என்கிறேன்.”

- என்றார்.

மறைந்த சோம்நாத் சாட்டர்ஜி பாராளுமன்றத்தில் இது வரை 10 முறை எம்.பியாக பொறுப்பு வகித்திருக்கிறார். 1968ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

மக்களவையில் அதிக நாட்கள் எம்.பியாக பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. 1971ல் தொடங்கி 2009ம் ஆண்டு வரை அவர் மக்களவையில் எம்.பியாக செயல்பட்டிருக்கிறார்.

1996ம் ஆண்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர் சோம்நாத் சாட்டர்ஜி. 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் வெற்றிபெற்று 14 வது மக்களவை சபாநாயகராக பதவியேற்றார்.

2008ம் ஆண்டு சோம்நாத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி அதுவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்பப் பெற்றுக் கொண்ட போது, சபாநாயகர் பதவியில் இருந்து சோம்நாத்தினை விலகச் சொல்லி கட்சித் தலைமை கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யாததால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் வேறெந்தக் கட்சியிலும் இணையாமல் தனித்து சுயமாக இயங்கி வந்த மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் சோம்நாத்.

தான் மக்களவை சபாநாயகராகப் பணியாற்றிய காலங்களில் கட்சி பேதமின்றி மக்கள் நலனுக்கான திட்டங்கள் குறித்த அலசல்கள் மற்றும் விவாதங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வந்த பொறுப்பு மிக்க சபாநாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் என்று பெருமை இவருக்கு உண்டு. 

தொடர்ந்து பல நாட்களாக சிறுநீரகக் கோளாறால் பாதித்து வந்த சோம்நாத் சாட்டர்ஜிக்கு கொல்கத்தாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டையாலிஸிஸ் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்த அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை நேற்று மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 89 ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com