பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி பிஸ்கட் பாக்கெட்டுகளைத் தூக்கி எறிந்து கண்டனத்துக்குள்ளான கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர்!

பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி... ரேவண்ணா பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசி எறிந்த காட்சி காணொலியாக...
பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி பிஸ்கட் பாக்கெட்டுகளைத் தூக்கி எறிந்து கண்டனத்துக்குள்ளான கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர்!

கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடும் வெள்ளச்சேதத்தினால் வீடுகளையும், உடமைகளையும் இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்வையிட அங்கே வருகை தந்த கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும், முதலமைச்சர் H D குமாரசாமியின் மூத்த சகோதரருமான H D ரேவண்ணா பாதிக்கப்பட்ட மக்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு பசியுடன் காத்திருந்த அவர்களை நோக்கி பிஸ்கட் பாக்கெட்டுகளைத் தூக்கி எறிந்தார். இந்தக் காட்சிகள் காணொலிகளாக சமூக ஊடகங்களில் வெளியாகின. ரேவண்ணாவிடம் இருந்து வீசப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளை முகாமிலிருந்த பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் பிரித்துச் சாப்பிடத் தொடங்கிய போதும். பெரும்பாலான மக்கள் அதைத் தொடவும் விரும்பாமல் கோபத்துடன் ஒதுங்கினர். சிலர் அதை ரேவண்ணாவை நோக்கி ஆத்திரத்துடன் வீசும் முயற்சியில் ஈடுபடவில்லையே தவிர அவரிடம் அவரது செயலுக்காக சண்டையிடும் மனநிலையில் இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. ஒரு மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் போது இப்படியா அலட்சியமாக நடந்து கொள்வது? என்ற குமுறல் அவர்களிடத்தில் இருந்தது.

ரேவண்ணா பிஸ்கட் பாக்கெட்டுகளை எறிந்த காட்சி காணொலியாக...

இதைப்பற்றி ரேவண்ணாவிடம் விளக்கம் கேட்டதற்கு, அன்று தான் அதிகப்படியான பணி அழுத்தத்தில் இருந்ததால் அடுத்த பணிக்கு விரையும் பொருட்டு அப்படி நடந்து கொண்டதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் பதிலில் யாருக்கும் திருப்தியோ, சமாதானமோ ஏற்பட்டிராத நிலையில் தற்போது ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா தன் தந்தையின் செயலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

அவரது மன்னிப்பில் குறிப்பிடப் பட்டிருந்த செய்தி;

என் தந்தை மிகவும் தன்மையான மனிதர். ஹசன் தொகுதி என் தந்தையுடைய சொந்தத் தொகுதி என்பதால், இங்கே பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவாக முதலில் உதவிப் பணிகளைத் தொடங்கியவர் என் தந்தையே. அவரது சார்பில் லாரி, லாரியாக பாலும், பிற அத்யாவசியப் பொருட்களும், உணவுப் பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஏராளமாக அனுப்பப் பட்டுள்ளது. அவர் எதிர்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு கிளப்புவதைப் போல ஏழைகளிடம் அலட்சியம் காட்டும் மோசமான மனிதரில்லை. அன்று நடந்த சம்பவத்திற்கு அவரது சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்; என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com