பாகுபலியை மிஞ்சி விட்டார் இந்த பாரிஸ்  ஸ்பைடர் மேன்!

அந்த இளைஞரின் பெயர் மமதோ கஸாமா! ஆனால், இனிமேல் உலக மக்களுக்கு அவர் பாரிஸின் ஸ்பைடர் மேன்!
பாகுபலியை மிஞ்சி விட்டார் இந்த பாரிஸ்  ஸ்பைடர் மேன்!

பாகுபலி திரைப்படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்ப உதவியோடு பிரபாஸ் கேரளாவின் சாலக்குடி நீர் வீழ்ச்சியைப் பின்பற்றி பிரமாண்டமான மலையில் தாவித் தாவி ஏறி மலையுச்சியைச் சென்றடைவதை அகண்ட திரையில் கண்கள் விரியக் கண்டு ரசித்திருப்பீர்கள். அதற்குச் சற்றும் குறையாத ஆச்சர்யமளிக்கிறது இந்த இளைஞரின் மாடிக்கு, மாடி தாவும் திறன். இவர் ஃப்ரான்ஸுக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகின்றன.

மலியன் அகதியான இந்த இளைஞர் கால்பந்தாட்டப் போட்டியொன்றைக் காணச் சென்ற நேரத்தில் அங்கே நான்கு மாடி அபார்ட்மெண்ட்டின் பால்கனியொன்றிலிருந்து தவறி விழுந்த குழந்தையொன்று அதிர்ஷ்டவசமாக ஒரு பிடிமானத்தைப் பற்றித் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண நேரிட்டது. குழந்தைக்கு பிடிமானம் கிடைத்தது தெய்வச் செயல். விரைந்து சென்று யாராவது காப்பாற்றா விட்டால் இன்னும் சில நிமிடங்களில் குழந்தையின் பிடி விலகி குழந்த அந்தரத்தில் நழுவ ஏராள வாய்ப்புகள் இருந்தன. இதை நேரில் கண்ட உடனே சடுதியில் இந்த மலியன் இளைஞன் வெறும் கைகளால் அந்த 4 மாடி அபார்ட்மெண்ட்டின் சுவர்களையும், பால்கனி பிடிமானங்களையும் பற்றி எம்பிக் குதித்து மேல்நோக்கிச் செல்லத் தொடங்கினார். இது முற்றிலும் அபாயகரமான முடிவு. குழந்தையைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நல்லுணர்வு மட்டுமே அந்த இளைஞரைக் காப்பாற்றி இருக்கக் கூடும். இல்லாவிட்டால் கரணம் தப்பினால் மரணம் தான். எப்படியோ விரைந்து முடிவெடுத்து மாடி, மாடியாக வெறும் கைகளால் தாவி ஏறு மேலே சென்ற அந்த இளைஞர் அடுத்த நொடியில் அந்தக் குழந்தையை ஒரு கையால் பற்றி இழுத்து வெகு பாதுகாப்பாக பால்கனியுள் விழுந்தார்.

இந்தச் செய்தியை கேள்விப்பட்ட சமூக ஊடகங்கள் அகதி இளைஞரின் புகழை வாய் ஓயாமல் பரப்பத் தொடங்க விஷயம் பாரீஸ் மேயரின் காதில் விழுந்தது. அவர் பங்குக்கு அவரும் அந்த இளைஞரை பாரிஸின் நவீன ஸ்பைடர் மேன் என்று பாராட்டித் தள்ளியதோடு பாரிஸ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அகதியாக பாரிஸுக்குள் நுழைந்த அந்த இளைஞருக்கு கூடிய விரைவில் பாரிஸ் குடியுரிமை வழங்க பரிந்துரைப்பதாக அறிவித்திருக்கிறார். சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆன வீடியோவின் பின் அந்த இளைஞர் தற்போது பாரிஸ் ஹீரோ என புகழப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த இளைஞரின் பெயர் மமதோ கஸாமா!

ஆனால், இனிமேல் உலக மக்களுக்கு அவர் பாரிஸின் ஸ்பைடர் மேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com