370 ரத்து விஷயத்தில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? எனும் கேள்விக்கு மோடியின் ஆணித்தரமான பதில்!

காஷ்மீர் விவகாரத்தில் தயவு செய்து 370 ரத்தை எதிர்க்கும் நபர்களின் பட்டியலைப் பாருங்கள், பரம்பரையாக அரசியல் அதிகாரங்களை அனுபவித்து வரும் குடும்பங்கள், பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், எதிர்க்க
370 ரத்து விஷயத்தில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? எனும் கேள்விக்கு மோடியின் ஆணித்தரமான பதில்!
Published on
Updated on
2 min read

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்த 75 நாட்களில் எடுத்துள்ள மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370 வது அரசியல் சாசனப் பிரிவை நீக்கி அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதன் மூலமாக இனிமேல் ஜம்மு - காஷ்மீரும் இந்தியாவின் இதர மாநிலங்களைப் போன்று அனைத்து விதமான அரசியல் உரிமைகளையும் பெறும் நிலை ஏற்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மோடி அரசு எடுத்த இந்த முடிவு இந்தியா முழுவதுமாகப் பலரால் வரவேற்கப்பட்டாலும் இதை எதிர்ப்பவர்களும் கணிசமானோர் இருக்கிறார்கள்.

அசாதாரணமான இந்தச் சூழலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மோடியுடன் நிற்பார்கள் என அவர் எப்படி நம்புகிறார்? எனும் கேள்வியொன்று ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனம் மோடியுடன் நடத்திய கலந்துரையாடலொன்றில் அவரிடம் முன் வைக்கப்பட்டது.

அதற்கு மோடி அளித்த பதில்;

காஷ்மீர் விவகாரத்தில் தயவு செய்து 370 ரத்தை எதிர்க்கும் நபர்களின் பட்டியலைப் பாருங்கள், பரம்பரையாக அரசியல் அதிகாரங்களை அனுபவித்து வரும் குடும்பங்கள், பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சில நண்பர்கள் மட்டுமே. ஆனால், ஆமோதிப்பவர்களைப் பாருங்கள். பொதுவாக இந்திய மக்கள் அவர்களின் அரசியல் விருப்பம் எதுவாக இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை ஆதரவளித்துள்ளனர் என்பதே உண்மை. முந்தைய ஆட்சிகளில் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட கடுமையான அதே சமயம் அத்தியாவசியமானதுமான இந்த முடிவுகள் இன்று சாத்தியமாகியுள்ளன என்று பெரும்பாலான இந்திய மக்கள் எண்ணுகின்றனர்.

சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35 ஏ பிரிவு ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களை எவ்வாறு முழுமையாகத் தனிமைப்படுத்தின என்பது இப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. 70 ஆண்டுகாலமாக மக்களின் விருப்பங்களை அரசுகள் நிறைவேற்றவில்லை. இந்தியக் குடிமக்கள் வளர்ச்சியின் பலன்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். வருவாயை அதிகரிக்க சரியான பொருளாதார வழிகள் இல்லை. இப்போது வளர்ச்சிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அது மட்டுமல்ல, மோடி பேசுகையில் “ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகள் எப்போதும் சிறந்த எதிர்காலத்தையே விரும்பினர். ஆனால் 370 வது பிரிவு அதை செயல்படுத்தவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் மீது அநீதிகள் இழைக்கப்பட்டன. தற்போது பிபிஓக்கள் முதல் உணவு பதப்படுத்துதல், சுற்றுலா என அனைத்துக்குமான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன. பல தொழில் முதலீட்டைப் பெறலாம். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கல்வி திறன் மேம்படையும் என்றும் கூறினார்.

ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமானது மக்களின் விருப்பப் படியும் அவர்களின் கனவுகள் மற்றும் லட்சியங்களின் அடிப்படையிலும் உருவாகும் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த மாநிலத்தின் வளர்ச்சி முதன்மையானது. 370வது மற்றும் 35 ஏ பிரிவினால் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தது. வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கலிகள் உடைந்து விழுந்தன. இனி மக்கள் தங்களின் நோக்கத்தை தாங்களே வடிவமைப்பார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் தொடர்பான முடிவுகளை எதிர்ப்பவர்களிடம் பிரதமர் மோடி ஒரு அடிப்படை கேள்விக்கு பதிலளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மோடியின் கேள்வி:

370 மற்றும் 35 ஏ பிரிவினைத் தொடர்வது எவ்வாறு பாதுகாப்பளிக்கும்?

பொது மக்களுக்கு உதவும் எந்தவொரு விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப் பழகியவர்களுக்கு இந்த கேள்விக்கு உரிய பதில் எப்போதும் இருக்கப்போவதில்லை. இப்படியானவர்கள் அரசின் எல்லா நலத்திட்டங்களையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். எதிர்ப்பவர்களிடம் உரிய பதில் இருந்தால் அவர்களது எதிர்ப்பில் அர்த்தம் இருக்கலாம்.

ஆனால், மக்களை கொடுமைபடுத்தும் மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்காக மட்டுமே எதிர்ப்பவர்களின் மனது துடிக்கிறது. அவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. மாறாக, இவ்விஷயத்தில் அரசின் முடிவுகளைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியரும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் நிற்கிறார்கள். அவர்கள் எங்களுடன் நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். வளர்ச்சி மற்றும் அமைதியின் பொருட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் என்றென்றும் எங்களுடன் இருப்பார்கள் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன் என்று மோடி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com