காதலெனப்படுவது சரணாகதி
By அகிலா கிருஷ்ணமூர்த்தி | Published On : 14th February 2020 07:00 AM | Last Updated : 13th February 2021 12:04 PM | அ+அ அ- |

மனித குல வரலாற்றில் உணர்வு என்கிற ஒன்றை உணரச்செய்வது காதல். சிலவற்றை வகுத்துக்கொண்டு இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்பதான வரையறையை முன்திட்டமிடலோடு ஒருபோதும் அணுக முடியாது.
எது காதல்? அதை உள்வாங்குகிற இரசவாதபுத்தி மிக முக்கியமானது. காதல் என்பது நம்பிக்கை. ஆமாம். துயரக்காலங்களில் சிந்தும் கண்ணீரை நிலத்தில் சேர்க்காமல் நினைவில் சேர்ப்பான் அல்லது சேர்ப்பாள் என்கிற பாதுகாப்பு.
பிப்ரவரி 14 கேளிக்கைக்கானக் கொண்டாட்டமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். மேற்கத்திய விழா அது. அந்தக் கிடார் நரம்பின் தழுவல் ஒலி, உண்மைக்காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதரின் மரண அசைவு. பார்வை இழந்த, வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்காவலரின் மகள் அஸ்டோரியா. மனம் முழுக்கக் காதலைக் குவித்து அரிதாரங்கள் அற்ற, தெளிந்த காதலை வாழ்த்து அட்டையாக்கி அவள் கரங்களில் சேர்க்கும் தருணத்தில் கல்வீசிக் கொடுமைப்படுத்தி வாலண்டைன் தலை துண்டாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை காதலுக்காகக் கொடுக்கப்படும் விலையுயர்ந்த பரிசு வெட்டுண்ட தலைகள். களங்கள்தான் மாறுபடுகின்றன. ஒன்று நீருக்கு அடியில் அல்லது இரயிலுக்கு அடியில். காதல், தாய்க்கவிச்சி மாறாத ஒரு குழந்தை. பாலைவனத்தின் மழைச்சாரல். பெரும் சுனாமிக்குப் பின்னால் மிரட்டும் நிசப்த சமுத்திரம். எல்லாமுமாகப் பாரித்தும் பூரித்தும் கிடப்பது காதல்.
கி.பி.270 க்கு முன் காதல் இல்லையா என்ற கேள்வி எழும். அதன் காலகட்டம் என்னவாக இருந்தது என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. காப்பியக் காதல் பெரும்பாலும் காத்திருப்புகளில் தொடங்கி அதிலேயே முடிந்திருக்கும்.
காதலும் வீரமுமாக உயிர்ப்போடு விளங்கியது நம் தமிழ்ச் சமூகம். அதற்கான பின்புலம் காதல் சாதியை உடைக்கும். வர்க்கத்தைக் கலக்கும். தான் எனும் உள்மிதப்பு அழிந்து உள்ளம் ஒன்றி உனக்காகவே நான் என்கிற சரணாகதி நிலையை உருவாக்கும். பிரிவினையற்ற சமரச ஆயுதமாக இருப்பதால்தான் பிரிக்க நினைப்பவர்களைக் காதல் அச்சுறுத்துகிறது.
ஜென்னி இறந்தபோதே உயிரோடிருக்கும் மார்க்ஸ் மனதளவில் இறந்ததாக ஏங்கல்ஸ் கூறினார். காரல் மார்க்ஸ், ஜென்னியாகத் தனித்துப் பார்க்காமல் மார்க்ஸின் ஜென்னி, ஜென்னியின் மார்க்ஸாக எண்ணுவதற்குக் காரணம் போராளிகளாக அவர்கள் பட்ட இன்னல்களிலும் வறுமையிலும் கோர்த்துக்கொண்ட காதலின் ஈரம்தான்.
ஷேக்ஸ்பியர், தாமஸ் ஹார்டியைவிட ஆங்கிலக் கவிஞரான ராபர்ட் ப்ரௌனிங்கு, எலிசபெத் பாரெட் எழுதிய மொழிதான் உலகின் ஆகச் சிறந்த காதல் கவிதையாகச் சொல்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையும் கையறுநிலையில் தொடங்கப்பட்டிருக்கிறது.
எலிஸபெத் தன்னைவிட ஆறு வயது குறைவான ப்ரௌனிங்கைத் திருமணம் செய்துகொண்டார். வீட்டுச் சிறையில் எழுந்து நடக்க முடியாமல் தன்னை முடக்கிக்கொண்டவர். தேடலில் வியாபித்த காதல் வரிகளால் காதலனைக் கண்டடைந்தார். மார்க்ஸ் , ஜென்னியைப் போல் 1845 – 46 களில் கடிதங்களால் தங்களை கரைத்துக் கொண்டவர்கள் இவர்கள். 1859 இல் உடல்நலம் பாதிக்கப்பட்டு எலிசபெத் இறக்கிறார். அதற்குப் பிறகு 28 ஆண்டுகள் மணமுடிக்காமல் ப்ரௌனிங் வாழ்கிறார். அவர் மீது காதல் கொண்டு மணம் செய்ய ஆசைப்படும் பெண்ணிடம் அவர் இப்படிக் கூறுகிறார் “My heart is buried in Florence.” எப்படியான காதல் இது!
மேலும் படிக்க.. காதல் தோல்வியைக் கொண்டாடும் ரசிகர்கள்
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட இப்படியான காதல் இன்றைக்கு நமக்குள்ளும் நம்மைச்சுற்றியும் கவனிப்பின்றி உயிர்க்கவே செய்கிறது. உயர்வு தாழ்வுகளைக் கட்டுடைப்பதற்காக உலகின் எந்தத் திக்குகளில் இருந்தும் பாயக்கூடிய சக்திவாய்ந்த இப்படியான நெகிழ்வு மட்டுமே வறட்டுச் சூழலில் இருந்து நம்மை விடுபடச் செய்யும்.
ஆடைகளை மாற்றிக்கொள்வதுபோல் உறவுகளை மாற்றுவது ஆபத்தானது. விவாதங்கள், கருத்து மோதல்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. வருடக்கணக்கில் காதல் செய்து மணம் புரிந்தவர்கள்கூட புரிதல் இல்லாமல் உறவை முறித்துக் கொள்கின்றனர். அப்படியானால் அங்கே காதல் எங்கே இருக்கிறது?
பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாமல் தன்னுடைய சாதிக்கு, சமூக மதிப்பிற்குப் பொருந்துவதுபோல் தேடிக் கண்டுபிடித்துப் பழகுகிறார்கள். மறுத்தால், குரூரமாக அமிலம் வீசுவது, கல்லைத் தூக்கிப்போட்டுக் கொல்வது, பழிவாங்கும் நோக்கில் நடத்தையில் குற்றம் சுமத்துவது.
சமூகத்திற்காக வாங்கப்படும் விலைபொருளாகக் காதல் மாறிப்போனது வேதனைக்குரியது. பாலின பேதமின்றி மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். காமம் – காதல், பெஸ்டி - காதல் இவற்றுக்கு இடையேயான நுட்பமான சரடு புரியாமல்போனது காலத்தின் குளறுபடி. பிப்ரவரி 14 அன்பர்களின் நாளும்கூட. களியாட்டங்களை ஒருபுறம் வைத்துவிட்டு வஞ்சிக்காத அன்பைக் கொடுத்தால் பெருங்காதல் தேடிவரும். இந்தச் சூட்சுமம் புரிந்தால் எல்லா தினமும் காதலர் தினம்தான். ஆதலால் காதல் செய்வீர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...