காதல் தோல்வியைக் கொண்டாடும் ரசிகர்கள்
By வாணிஸ்ரீ சிவக்குமார் | Published On : 14th February 2020 07:00 AM | Last Updated : 13th February 2021 12:03 PM | அ+அ அ- |

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால். கண்ணீர் நிச்சயம் உண்டு. காதலில் மகிழ்ச்சியும், துள்ளலும் மட்டுமல்ல.. வலிகளும், கண்ணீரும் நிறைந்ததுதான். அதில் வெற்றி பெற்று மணம் முடித்து மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்வதுதான் காதலுக்கு செய்யும் மரியாதை.
ஆனால், காதலில் ஜெயித்தவர்களை விட, தோற்றவர்களைத்தானே நாம் கொண்டாடி வருகிறோம், கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆம், லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட் கூட காதலில் தோல்வி அடைந்தவர்கள்தானே. இவர்களைத்தானே இன்று வரை காதல் ஜோடிகள் எனச் சொல்லி கவிதை முதல் காவியம் வரை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன், யாரையாவது கிண்டல் செய்ய வேண்டும் என்றால் கூட இவர்களைத்தானே வம்புக்கு இழுக்கிறோம். 'ஆமாம் இவங்க பெரிய ரோமியோ - ஜூலியட் பாரு'.. என்றோ, 'லைலா - மஜ்னு' எனச் சொல்லியோ தானே கிண்டல் செய்கிறோம்.
இதையும் படிக்கலாம்.. தோற்றவர் வென்றவர் ஆகிறார்
அது மட்டுமா? காதலை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கூட பாருங்கள், காதலில் தோல்வி அடைந்த படங்கள்தான் வசூலிலும் சரி, நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருப்பதிலும் சரி மிகப்பெரிய அளவில் வெற்றிகண்ட படங்களாக இருக்கும்.
இதற்குக் காரணம், மனிதர்கள், தங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு தோல்வியின் வெளிப்பாடாக, இதுபோன்ற படங்களைப் பார்த்து ரசிப்பதன் மூலம் ஆறுதல் தேடிக் கொள்ள முயல்கிறார்களா? என்றும் எண்ணத் தோன்றுகிறது.
அப்படிக் காதல் தோல்வி அடைந்த எத்தனை படங்கள்தான் சக்கைப்போடு போட்டிருக்கும் என்று கணக்குப் பார்த்தால்..
- உயிருள்ளவரை உஷா
- முதல் மரியாதை
- அந்த 7 நாட்கள்
- மண்வாசனை
- மூன்றாம் பிறை
- பதினாறு வயதினிலே
- இதயத்தைத் திருடாதே
- புன்னகை மன்னன்
- புதிய பாதை
- இதயம்
- மௌன ராகம்
- காதல்
- ஆட்டோகிராஃப்
- குணா
- நீ வருவாய் என..
- பொற்காலம்
- உயிரே
- மௌனம் பேசியதே
- பூவே உனக்காக
- காதலர் தினம்
- சேது
- 7ஜி ரெயின்போ காலனி
- விண்ணைத் தாண்டி வருவாயா
- பருத்தி வீரன்
- சுப்ரமண்யபுரம்
- 96
என இந்த பட்டியல் நீண்டு கொண்டேப் போகும். இதுபோன்ற இன்னும் பல படங்கள் உதாரணமாக உள்ளன.. நினைவில் வராதவை ஏராளம்.
அவ்வளவு ஏன்? விஜய் நடித்த காதலுக்கு மரியாதையை விட, காதலில் தோல்வி அடைந்த பூவே உனக்காக படம் மெகா ஹிட்டானதும் நினைவிருக்குமே?
காதலித்து ஜெயித்தவர்கள் தம்பதிகளாகிவிடுகிறார்கள். ஆனால், காதலித்து தோல்வி அடைந்தவர்கள், எப்போதும் ஒருவருக்கு ஒருவர் காதலர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, காதலில் ஜெயிப்பவர்களை விட, காதலில் தோற்பவர்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோமா?