ஆலிஸை வரைந்த ஜான் டென்னியலுக்கு கூகுளின் பெருமை

பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற சித்திரக்காரரான சர் ஜான் டென்னியலின் 200-வது பிறந்த நாளையொட்டி, அவருடைய ஓவியத்தை வெளியிட்டுச் சிறப்புச் செய்திருக்கிறது கூகுள் தேடுபொறி.
ஆலிஸை வரைந்த ஜான் டென்னியலுக்கு கூகுளின் பெருமை

பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற சித்திரக்காரரான சர் ஜான் டென்னியலின் 200-வது பிறந்த நாளையொட்டி, அவருடைய ஓவியத்தை வெளியிட்டுச் சிறப்புச் செய்திருக்கிறது கூகுள் தேடுபொறி.

டென்னியல் என்றால் உடனே பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் லூயி கரோலின் ஆலிஸின் அற்புத உலகம் தொடருக்குச் சித்திரங்களைத் தீட்டியவர் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது.

கற்பனையான ஆலிஸை சித்திரமாக இன்றும் நம் கண் முன்னே நடமாடச் செய்துகொண்டிருப்பவர் ஜான் டென்னியல்.

1820, பிப்ரவரி 28 ஆம் தேதி லண்டனில் பிறந்தவர் டென்னியல். அரசியல் கார்ட்டூனிஸ்ட். நகைச்சுவைச் சித்திரக்காரர். ஆனால், அவர் என்னவோ ஆலிஸின் அற்புத உலகத்துக்காகத்தான் எப்போதும் நினைவுகூரப்படுகிறார். உள்ளபடியே, அதுவொன்றுதான் இப்படியொரு சித்திரப் பணியை அவர் முதலும் முடிவுமாக மேற்கொண்டது.

ஜான் டென்னியலின் தந்தை அவருக்கு நடனம், வேலியிடல், குதிரையேற்றம் எல்லாம் கற்றுத் தந்தார். ஆனால், அவர் என்னவோ சித்திரம் தீட்ட வந்துவிட்டார்.

இருபது வயதிலேயே விபத்தொன்றில் அவருடைய வலது கண் பார்வை இழந்துவிட்டது. ஆனால், அவர் அதைத் தந்தையிடம் தெரிவிக்கவேயில்லை.

டென்னியலுக்குப் பயங்கரமான நினைவாற்றல், ஒரு முறை ஒன்றைப் பார்த்தாலே போதும், நினைவில்கொண்டுவந்து வரைந்துவிடுவார். அவருடைய பதினாறு வயதிலேயே ஓவியக் கண்காட்சியொன்றை நடத்தினார் டென்னியல். 1893-ல் அவருக்கு பஞ்ச் இதழில் அவர் வரைந்த கார்ட்டூன்களுக்காகவும் ஆலிஸின் சித்திரங்களுக்காகவும் பிரிட்டிஷ் அரசின் நைட்ஹூட் - வீரத்திருமகன் விருது வழங்கப்பட்டது. கடுமையான உழைப்பின் காரணமாக அவருடைய இடது கண்ணும் அவரைக் கைவிடத் தொடங்கியது. ஆனாலும், அவர் முழுவதுமாகப் பார்வையை இழக்கும்வரை வரைந்துகொண்டேதான் இருந்தார். 1914 பிப்ரவரி 25 ஆம் தேதி அவருடைய 93-வது வயதில் மறைந்தார் ஜான் டென்னியல்.

அற்புத உலகின் ஆலிஸ் இருக்கும் வரை டென்னியலின் நினைவும் இருக்கும். கூகுளும் இன்று அவரை நினைவுகூர்ந்து கொண்டாடியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com