கீழடியில் அருங்காட்சியம் அமைக்கும் பணியை இந்தாண்டுக்குள் முடிக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ. வேலு தகவல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அருங்காட்சியம் அமைக்கும் பணியை இந்த ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கீழடியில் நடைபெற்றுவரும் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட அமைச்சர்கள்.
கீழடியில் நடைபெற்றுவரும் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட அமைச்சர்கள்.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அருங்காட்சியம் அமைக்கும் பணியை இந்த ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சனிக்கிழமை தெரிவித்தார். 

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கீழடியின் விரிவாக்கமாக அருகே உள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களிலும் அகழாய்வு தளங்கள் அமைக்கப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது.

கீழடி உள்ளிட்ட இடங்களில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

கரொனா இரண்டாம் அலை காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் தியாகராஜன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கீழடி வந்து அகழாய்வுத் தளத்தை பார்வையிட்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியத்துக்கான கட்டட கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது.

கீழடி அகழாய்வு மூலம் பண்டைய கால தமிழர்களின் நகர நாகரிகம் வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது.  கீழடியில் கண்டறியப்பட்ட பொருள்களை காட்சிப் படுத்துவதற்காக கீழடி அகழாய்வுத்தளம் அருகே ரூ 12.21 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணி தாமதமாக நடைபெறுவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து தற்போது அருங்காட்சி அமைக்கும் பணியை ஆய்வு செய்துள்ளோம்.

திட்ட பணி தொடங்கப்பட்டது முதல் இதுவரை 60 சதவீத பணிகள் முடிந்திருக்க  வேண்டும். ஆனால் 17 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஆய்வு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அருங்காட்சியம் அமைக்கும் பணியை முழுமையாக முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அதிமுக அரசு கொண்டு வந்த எந்த திட்டத்தையும் நாங்கள் ரத்து செய்ய மாட்டோம்.

அந்த திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியையும் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த மாட்டோம். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, திருபுவனம் கூட்டுறவு பால் பண்ணை சங்கத்தலைவர் சேங்கை மாறன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com