சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் தீ: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் 

சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ பிடித்தது மளமளவென பரவி குப்பைக்கிடங்கு முழுவதும் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். 
சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் தீ
சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் தீ

சீர்காழி:  சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ பிடித்தது மளமளவென பரவி குப்பைக்கிடங்கு முழுவதும் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். 

சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த 24 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரிக்கப்படும். குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தனியார் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. 

தீ பரவலை கட்டுப்படுத்தவதற்காக குப்பைகளை கிளறப்பட்டு தனியாக பிரித்து கொட்டும் ஜேசிபி இயந்திரம்

அவ்வாறு அங்கு கொட்டி வைக்கப்படும் குப்பைகளிலிருந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளிலிருந்து இயற்கை  உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குப்பைகள் நகராட்சி குப்பை கிடங்கில் பல டன் கணக்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு குப்பையில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ நேரம் செல்ல செல்ல மளமளவென பரவி குப்பைக்கிடங்கு முழுவதும் எரிய தொடங்கியது. 

இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியர்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குப்பை மலைபோல குவிந்து கிடப்பதால் தீயணைப்பு பணி பெரும் சவாலாக உள்ளது. 

தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜேசிபி இயந்திரம்

இதனால் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி அறிவுறுத்தலின்படி, இரண்டு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு மலைபோல் குவிந்த குப்பைகள் கிளறப்பட்டு தனியாக பிரித்து கொட்டப்படுகிறது.  தொடர்ந்து தீயணைப்பு வாகனம் மற்றும் நகராட்சி குடிநீர் வாகனம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மலைபோல் குவிந்து உள்ள குப்பையை ஏற்பட்டுள்ள தீயால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் அருகில் குடியிருப்பு பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்னை, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் நகராட்சி ஊழியர்கள் இணைந்து போராடி வருகின்றனர். குறைந்தது தீயை முற்றிலும் அழிக்க இரண்டு நாள்கள் கூட ஆகும் என தீயணைப்பு துறையினர் கூறுகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் தீயை கட்டுப்படுத்தி அணைக்க எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலரிடம் ஆலோசனை நடத்தினர். 

அப்போது சீர்காழி திமுக நகர செயலாளர் சுப்பராயன், திமுக இளைஞரணி சேர்ந்த பொறியாளர் தன்ராஜ், நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் வீரப்பன், ஊழியர் ஐயப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com