பாஜக தோ்தல் அறிக்கையை மக்கள் புறக்கணிப்பார்கள்: செல்வப்பெருந்தகை

பாஜக தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை
Updated on
2 min read

சென்னை: மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பாஜகவின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கை சமூகநீதி,மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும். ஒவ்வொரு மதத்திற்கும் இருக்கிற தனித்தன்மையை கடுமையாக பாதிக்கிற நடவடிக்கையாகும். அதேபோல, 28 மாநிலங்களில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமற்றதாகும். தற்போது நடைபெறுகின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை
சென்னையில் மருத்துவ மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற 2 பேர் கைது

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காமல் புறக்கணித்த பாஜகவினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும். ஏற்கனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அந்ததிட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பாஜக, தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூ. 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியை பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது. வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பாஜகவை எவரும் மறந்திட இயலாது.

மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை
மோடி தேர்தல் அறிக்கையில் பணவீக்கம், வேலையின்மை வார்த்தையே இல்லை: ராகுல்

தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பாஜக, டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லை.

கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது.

எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பாஜகவின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பாஜக கூறவில்லை.இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com