நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

நாமக்கல் மாவட்டம்: வாக்காளர்களின் முக்கிய கோரிக்கைகள்
நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

இயற்கை அழகு மிகுந்த கொல்லிமலை, புகழ்பெற்ற ஆஞ்சனேயர் கோயில், முட்டை உற்பத்தி, எல்.பி.ஜி. டேங்கர், டிரெய்லர், டாரஸ், ரிக் போன்ற சரக்கு வாகனத் தொழில்கள் உள்ளிட்டவற்றை அடையாளமாகக் கொண்டது நாமக்கல் மக்களவைத் தொகுதி. முட்டை நகரம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்டவை பிறகு தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. 1997 ஜன. 1-ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் உதயமானது. அதற்கு முன், இப்பகுதி திருச்செங்கோடு, ராசிபுரம் (தனி) என்ற இரு மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருந்தது.

திருச்செங்கோடு தொகுதி: 1952 முதல் 2004 தேர்தல் வரை, சங்ககிரி (தனி), மொடக்குறிச்சி, ஈரோடு, இடைப்பாடி, கபிலர்மலை, திருச்செங்கோடு உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் இதில் இடம்பெற்றிருந்தன.

இங்கு நடைபெற்ற 14 தேர்தல்களில், 1952-இல் எஸ்.கே.ராமசாமி என்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். 1957, 1962-இல் சுப்பராயன் (காங்கிரஸ்), 1967-இல் க.அன்பழகன் (திமுக), 1971-இல் எம்.முத்துசாமி (திமுக), 1977-இல் ஆர்.குழந்தைவேலு (அதிமுக), 1980-இல் எம்.கந்தசாமி (திமுக), 1984-இல் பி.கண்ணன் (அதிமுக), 1989-இல் கே.சி.பழனிசாமி (அதிமுக), 1991-இல் கே.எஸ்.சௌந்தரம் (அதிமுக), 1996-இல் கே.பி.ராமலிங்கம் (திமுக), 1998-இல் எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக), 1999-இல் எம்.கண்ணப்பன் (மதிமுக), 2004-இல் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ராசிபுரம் தொகுதி: 1977-இல் ராசிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி உருவானது. இதில், ராசிபுரம், நாமக்கல் (எஸ்.சி.), சேந்தமங்கலம் (எஸ்.டி), ஆத்தூர், தலைவாசல் (எஸ்.சி.), சின்ன சேலம் ஆகிய 6 பேரவை தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.

1977, 1980, 1984, 1989, 1991 ஆகிய 5 தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.தேவராஜன் வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் கே.கந்தசாமி (தமாகா), 1998, 1999 தேர்தலில், டாக்டர் வெ.சரோஜா (அதிமுக), 2004 தேர்தலில் கே.ராணி (காங்கிரஸ்) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

நாமக்கல் தொகுதி உதயம்: 2009-ஆம் ஆண்டு மாவட்டத் தலைநகர் அடிப்படையில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உதயமானது. இதில், நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், சங்ககிரி (சேலம் மாவட்டம்) ஆகிய பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பேரவைத் தொகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 தேர்தலில் காந்திசெல்வன் (திமுக) வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் பி.ஆர்.சுந்தரம் (அதிமுக) வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றி பெற்றார்.

களம் காணும் வேட்பாளர்கள்: கடந்த முறை 29 பேர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கொமதேக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 40 பேர் போட்டியிடுகின்றனர். ஆனாலும் களத்தில் முக்கோணப் போட்டியே நிலவுகிறது.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார் வி.எஸ்.மாதேஸ்வரன். நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலராக இவர் உள்ளார். திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி தன் வசமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளராக எஸ்.தமிழ்மணி போட்டியிடுகிறார். மாவட்ட வர்த்தக அணி செயலராக உள்ளார். கோவையில் எண்ணெய் நிறுவனம் நடத்தி வருகிறார். இரட்டைஇலை சின்னத்தை நம்பி இருக்கிறார் இவர். பாஜக வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இந்த முறை பாமக, அமமுக, தமாகா மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக, திமுகவில் நீண்ட கால அரசியல் பயணம் செய்தவர்,

ஏற்கெனவே எம்எல்ஏ, எம்.பி.யாக இருந்தவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜகவில் உள்ளார். இவரது போட்டியால் இத்தொகுதி நட்சத்திரத் தொகுதியாக கவனிக்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நாமக்கல் என்.புதுப்பட்டியைச் சேர்ந்த க.கனிமொழி போட்டியிடுகிறார். பி.டெக். படித்த இளம் பட்டதாரி. அக்கட்சியின் மகளிரணி பாசறைத் தலைவராக உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால், முட்டை உற்பத்தி கேந்திரமான நாமக்கல் கோட்டையைக் கைப்பற்றும் முனைப்பில் வேட்பாளர்கள் பிரசாரம் தீவிரமாகி உள்ளது.

முக்கியக் கோரிக்கைகள்

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அவ்வப்போது வெளியாகும் பறவைக் காய்ச்சல் தொடர்பான தகவல்களால், 15 நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முட்டைக்கு, 'பறவைக் காய்ச்சல் அற்ற தனி மண்டலம்' என்ற பெயருடன் நாமக்கல்லில் புதிய மண்டலம் உருவாக்கப்பட வேண்டும். முட்டைகளைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.

நிறைவேறாத கோரிக்கைகள்: நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான லாரி கூண்டு கட்டும் ஆலைகள் இயங்கி வருகின்றன. மாதந்தோறும், 50, 100 லாரிகள் கூண்டுகட்டி வந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள தரக் கட்டுப்பாடு தொடர்பான ஏ.ஆர்.ஐ. சான்றிதழ் கட்டாயத்தால், கூண்டு கட்ட வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

பரமத்திவேலூரில் வெற்றிலை, வாழை விவசாயம் அதிகமாக உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது. அதை கோவைக்கு மாற்றிவிட்டனர். இதனால் வெற்றிலை தொடர்பான பாதிப்புகள் குறித்து விவசாயிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை.

வெற்றிலையை பதப்படுத்துவதற்கான குளிர்பதனக் கிடங்கை அமைக்க வேண்டும். வெற்றிலைக்கு விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் ஆகியவை விவசாயிகளின் கோரிக்கைகள்.

லாரி உரிமையாளர்களுக்கான நலவாரியம், காலாண்டு வரி ரத்து, சுங்கச்சாவடிகள் அகற்றம், திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டம், திருச்செங்கோடு போர்வெல், விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை என்ற புகார் உள்ளது.

வாக்காளர்கள் விவரம்

மொத்த வாக்காளர்கள் : 14,52,562

ஆண்கள் : 7,08,317

பெண்கள் : 7,44,087

மூன்றாம் பாலினத்தவர் : 158

2019 தேர்தல் நிலவரம்

ஏ.கே.பி.சின்ராஜ் (கொமதேக) 6,26,293

டி.எல்.எஸ்.காளியப்பன் (அதிமுக) 3,61,142

பி.பாஸ்கர் (நாம் தமிழர்) 38,531

ஆர்.தங்கவேலு (மநீம) 30,947.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com