
90 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிய வேண்டும் என்ற இலக்கை கடவுளிடம் விட்டுவிடுகிறேன் என ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்றார். பாரீஸ் ஒலிம்பிக்கில் 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த போதிலும், அவருக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது.
அவருடன் இறுதிப்போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். பல ஆண்டுகளாக 90 மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக ஈட்டி எறிய வேண்டும் என்ற இலக்கு நீரஜ் சோப்ராவுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், 90 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிய வேண்டும் என்ற இலக்கை கடவுளிடம் விட்டுவிடுகிறேன் என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: 90 மீட்டர் தூரத்துக்கு அதிகமாக ஈட்டி எறிய வேண்டும் என்ற இலக்கை கடவுளிடம் விட வேண்டியிருக்கிறது. நான் நன்றாக தயார் ஆக வேண்டியுள்ளது. 90 மீட்டர் தூரம் குறித்து ஏற்கனவே பல்வேறு கருத்துகள் வலம் வருகின்றன. பாரீஸ் ஒலிம்பிக்கில் 90 மீட்டர் தூரம் என்ற இலக்கை அடைந்துவிடுவேன் என நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை. நான் எனது 100 சதவிகித உழைப்பைக் கொடுத்து வருகிறேன். அடுத்தடுத்தப் போட்டிகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.