உடல் உறுப்பு தானம் என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கையும் மனித இயல்பின் மிக உயர்ந்த தார்மீக எடுத்துக்காட்டு என்று தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், இதனால் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் கருணை மற்றும் தன்னலமற்ற தன்மையின் ஆழமான நற்பண்புகள் பிரதிபலிக்கப்படுவதாக கூறினார்.
ஜெய்ப்பூரில் உடல் தானம் செய்தவர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் வகையில் ஜெயின் சமூக அமைப்பும், தில்லியின் உடல் உறுப்பு தான சங்கமும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், உடல் உறுப்பு தானம் குறித்து மக்கள் உணர்வுபூர்வ முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதனை மனிதகுலத்திற்கு சேவை செய்யும் உன்னத பாரம்பரியத்துடன் இணைந்த ஒரு பணியாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உலக உறுப்பு தான நாளின் மையக்கருத்தான "இன்று ஒருவரின் புன்னகைக்கு காரணமாக இருங்கள்" என்பதை எடுத்துரைத்த தன்கர், உடல் உறுப்பு தானம் என்ற உன்னத நோக்கத்திற்காக ஒவ்வொருவரும் தனிப்பட்ட மற்றும் குடும்ப அர்ப்பணிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த உடல் உறுப்பு தானமானது பரவலான சமூக நலனுக்கான ஒரு கருவியாக மாறும்.
உடல் உறுப்பு தானத்தில் 'வர்த்தகமயமாதல்' அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த தன்கர், உடல் உறுப்புகளை சமுதாயத்திற்காக சிந்தித்து தானம் செய்ய வேண்டுமே தவிர, நிதி ஆதாயத்துக்காக செய்யக்கூடாது. உறுப்பு தானம் வேண்டி காத்திருக்கும் திறமையானவர்களுக்கு நாம் உதவும்போது, அவர்கள் இந்த சமூகத்திற்கான பொறுப்புள்ள ஒரு சொத்தாக மாற்றப்படுகிறார்கள்.
மருத்துவத் தொழிலை ஒரு "தெய்வீகமானத் தொழில்" என்று குறிப்பிட்டு, கரோனா பெருந்தொற்றின் போது 'சுகாதாரப் பணியாளர்களின்' தன்னலமற்ற சேவையை பாராட்டியவர், மருத்துவத் தொழிலில் உள்ள ஒரு சிலர் உறுப்பு தானத்தின் உன்னத தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
"உடல் உறுப்பு தானம் என்பது தந்திரமான சக்திகளின் வணிக ஆதாயத்திற்காக பாதிக்கப்படக்கூடியவர்களின் சுரண்டல் துறையாக இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது" என்று கூறினார்.
தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்தின் எடுத்துக்காட்டுகளால் நிறைந்த இந்தியாவின் வளமான கலாசார, வரலாற்று பாரம்பரியத்தை தெரிவித்தவர், அறிவு மற்றும் வழிகாட்டுதலின் பரந்த களஞ்சியமாக செயல்படும் நமது புனித நூல்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ள ஞானத்தை ஒவ்வொருவரும் பின்பற்றவும் அதன் வழிகாட்டுதலின்படி பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜனநாயகத்தின் அடையாளமாக அரசியல் வேறுபாடுகளை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பேசிய தன்கர், இந்த வேறுபாடுகள் ஒருபோதும் தேசிய நலனை மறைக்கக் கூடாது என்று எச்சரித்தார். ஜனநாயகத்திற்கு கடந்தகால அச்சுறுத்தல்கள், குறிப்பாக எமர்ஜென்சி காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்பான விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
மேலும் கார்ப்பரேட்டுகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் உள்ளூர் தயாரிப்புகளே முக்கியத்துவம் அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் மற்றும் அவசியமான பொருள்களுக்கு மட்டுமே இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.