
திமுகவுக்கு வலுவான அடித்தளமிட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 18) புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தில் விளிம்பு நிலை மக்களுக்காக போராடியவர் கருணாநிதி என்றும், மக்கள் குறைகளை கேட்டறிய மனுநீதி என்ற திட்டத்தை செயல்படுத்தியதையும் குறிப்பிட்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 18) வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரையும் எழுந்து நிற்கக் கோரினார். அவையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் ராஜ்நாத் சிங் பேசியதாவது,
''பஞ்சாப் முதல் தமிழ்நாடு வரை அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த காலத்தில் தலைவராக உருவெடுத்தவர் கருணாநிதி. 1960-களில் பெரும் அரசியல் தலைவராக உருவெடுத்தவர். 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர் கருணாநிதி.
கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை. மிகவும் துணிச்சல் மிக்கவை. பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவை பேணிக்காத்தவர்.
விளிம்பு நிலை மக்கள் தரமான கல்வியைப் பெற திட்டங்களை வகுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. மக்கள் குறைகளை கேட்டறிய மனுநீதி என்ற திட்டத்தை செயல்படுத்தியவர். 1989ஆம் ஆண்டிலேயே மகளிருக்கான சுய உதவிக்குழுக்களை கொண்டுவந்தவர்.
இந்தியாவின் தேசிய ஆளுமையாக இருந்தவர் கருணாநிதி. அவரின் பொதுநலத் தொண்டால் நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைசிறந்த நிர்வாகிகளில் ஒருவராக விளங்கினார். மத்தியில் வெற்றிகரமான கூட்டணி அரசு அமைய காரணமாக இருந்தவர்.
தனது ஆட்சிக் காலத்தில் மாநில உரிமைகளுக்காகப் போராடியவர். கூட்டாட்சி தத்துவத்துக்காக ஆணித்தனமாக குரல் கொடுத்தவர். நாட்டின் நலனுக்காகவும் நின்றவர். மாநில எல்லைகளைக் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டியவர்.
தமிழ் இலக்கியம், சினிமா துரையிலும் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்'' என ராஜ்நாத் சிங் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.