புதிய கட்டணங்களை விதிப்பதே திமுகவின் குறிக்கோள்: அண்ணாமலை

பொதுமக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது.
Annamalai
அண்ணாமலைபடம்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

பொதுமக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே திமுக குறியாக இருப்பதாக தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மின்வாரியம், ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாகக் கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Annamalai
இயக்குநர் பா. இரஞ்சித் மீது பெண் வழக்குரைஞர் புகார்!

இதன்படி, ஒரு வீட்டில் அல்லது நிறுவனத்தில், இரண்டு மின் இணைப்புகள் இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாகக் கருதி, மின் கட்டணத்தைக் கணக்கிடும் முறை, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்த முறையில், வாடகைக்குக் குடியிருப்போர்களுக்கு எப்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் என்ற தெளிவு இல்லை.

மேலும், இரண்டு மின் இணைப்புகள் என்பது, பெயர் அடிப்படையிலா அல்லது முகவரியின் அடிப்படையிலா, எதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கமும் இல்லை. இதனால், வாடகைக்குக் குடியிருப்பவர்கள், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த நேரிடுமோ என்ற கேள்வி எழுகிறது.

மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்று ஆண்டுகள் கடந்தும், அதனை நிறைவேற்றாமல், பொதுமக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்படுவதால், ஏற்கனவே 50% அதிகமாக மின்கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கும் பொதுமக்கள், தற்போது இந்த புதிய நடைமுறையில் உள்ள தெளிவின்மை காரணமாக, மேலும் மின்கட்டண உயர்வுக்கு ஆளாக நேரிடுமோ என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனைத் தெளிவுபடுத்துவது தமிழக அரசின் கடமை என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com