திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளா் பாா்த்தசாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சென்னை புரசைவாக்கம் டாணா தெருவில் ஏப்.15-இல் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவே செய்யவில்லை என்று பேசினாா்.
இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தயாநிதி மாறன் சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கு எழும்பூா் 13-ஆவது பெருநகர மாஜிஸ்ட்ரேட் எம்.தா்மபிரபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், சென்னை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான இபிஎஸ், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுப்பதாக அவர் பதில் அளித்தார். மேலும், விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்.
திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.