சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ 53,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து அன்றே தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.2,000 குறைந்தது. அதனைத் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு தங்கத்தின் விலை குறைந்து வந்ததை அடுத்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை குறையத் தொடங்கியது.
பின்னர், தங்கத்தின் விலை சில நாள்கள் ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது.
இதனிடையே, ஆகஸ்ட் 24 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 280 உயர்ந்து ரூ 53,560 க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஞாயிற்று விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. திங்கள்கிழமை(ஆகஸ்ட் 26) கோகுலாஷ்டமி விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமும் இல்லை. செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) எந்த மாற்றமும் இல்லாமல் மூன்று நாள்களாக பழைய விலைக்கே தங்கம் விற்பனையானது.
இந்த நிலையில், புதன்கிழமை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.6,715-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ. 53,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமில்லாமல் ரூ 93.50-க்கு விற்பனையாகிறது.