ஓடிபி கிடைப்பது இனி தாமதமாகும்! குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க டிராய் அதிரடி
குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புது விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


புதுதில்லி: குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புது விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள் வரும் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் மேலும் வங்கிகள் மற்றும் ஆப்-சார்ந்த சேவைகள் போன்ற நிறுவனங்கள் கடவுச்சொற்களை (ஓடிபி) அனுப்புவதற்காக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்கள் எண்களைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என டிராய் தெரிவித்துள்ளது.
நவீன டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடிகள் நடந்து வருகிறது. மக்களின் செல்போனுக்கு வரும் கடவுச்சொற்களை பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிப்பது, ஏதாவதொரு லிங்கை அனுப்பி அதன் மூலம் அவர்களது தகவல்களை திருடி பணத்தை எடுப்பது, அவர்களின் செல்போன் எண்களை செயலிழக்கச் செய்துவிடுவோம் என எச்சரிப்பது போன்ற பல மோசடிகள் நாள்தோறும் நடந்து வருகிறது. இது குறித்து பயனாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மோசடிகள் நின்றபாடில்லை.
இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, எந்தவொரு வங்கிகள் மற்றும் ஆப்-சார்ந்த சேவைகள் போன்ற நிறுவனங்கள் கடவுச்சொற்களை (ஓடிபி) அல்லது அங்கீகாரமான குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு முன்னர், அதன் தலைப்பு மற்றும் தகவல்கள் மற்றும் தங்களது எண்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
புதிய விதிகளின்படி, சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு குறுஞ்செய்திகளை ஸ்கேன் செய்யவும், அதனை அணுகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்படாத தகவல்கள் தடை செய்யப்படும். அது வங்கிகள் அனுப்பும் கடவுச்சொற்களாக இருந்தாலும் விதிமுறைகளுக்கு உள்பட்டே இருக்கே வேண்டும். இதனால், பயனாளர்களுக்கு கடவுச்சொற்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
வங்கிகள் இந்த விதிமுறைகளுக்கு உடன்படவில்லை என்றால், பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை பெறுவதில் பயனாளர்களுக்கு தாமதம் ஏற்படும். வங்கிகள் மற்றும் செயலி அடிப்படையில் சேவை வழங்குபவர்கள் எந்த எண்ணில் இருந்து கடவுச்சொற்கள் அனுப்பப்படும் என்பதை ஆக.31-க்குள் பதிவு செய்ய வேண்டும்.
அதேநேரத்தில் இந்த நடவடிக்கை மோசடி நடவடிக்கைகளை குறைப்பதில் பெரும் பங்காற்றும் என டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தும் இதனை நீட்டிக்க முடியாது என டிராய் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், செல்போன் மூலம் அழைப்பாளரின் பெயரை, கேஒய்சி அடிப்படையில் மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து டிராய் செயல்பட்டு வருகிறது. இது அழைப்பாளரின் உண்மையான விவரங்களை தெரிந்து கொள்ள உதவுவதுடன், ட்ரூகாலர் செயலி போன்றவற்றை பயனாளர்கள் சார்ந்து இருப்பதை குறைக்க உதவும். அரசு அளித்த ஆவணங்களில் உள்ள பெயருடன் கூடிய எண்ணை, மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடிவதால், மோசடிக்கான சாத்தியக்கூறுகளை தடுக்க முடியும் என டிராய் நம்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...