
சாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.சாத்தூர் நகர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான இருக்கன்குடி,மேட்டமலை படந்தால்,சத்திரப்பட்டி, ஏழாயிரம்பண்ணை,தாயில்பட்டி, வெம்பக்கோட்டை,பெத்து ரெட்டி பட்டி,சின்னதம்பியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் இரண்டாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | தாமிரவருணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ளிக்கிழமை காா்த்திகை வழிபாடு நடைபெறவுள்ள நிலையில், சந்தையில் அகல் விளக்கு மற்றும் பிற பொருள்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனா். 2 நாள்களாக தொடரும் மழையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் தேங்கி நிற்கிறது. இதில் பெத்து ரெட்டி பட்டி, சின்னதம்பியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து கிராமம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாத்தூர் வெம்பக்கோட்டை ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நீராவிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்கள் நிறைந்து விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.