மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள்! 60 புத்தகங்கள், தலா ரூ. 100 விலையில்... தமிழக அரசு திட்டம்!

அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மலிவு விலையில் வெளியிடும் தமிழ்நாடு அரசின் திட்டம் பற்றி...
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள்! 60 புத்தகங்கள், தலா ரூ. 100 விலையில்... தமிழக அரசு திட்டம்!

அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலை நூல்களாக வெளியிடத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.

அம்பேத்கரின் படைப்பாக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும், மராத்தி மொழியிலும் எழுதப்பட்டவை. அவற்றுள் பல அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்தவை. சில அவரது கையெழுத்துப் படிகளில் இருந்து பின்னர் வெளியிடப்பட்டவை.

இன்னும் சில, மும்பை சட்டமன்றத்திலும், ஆங்கில ஆட்சியாளர் அவையிலும், அரசியல் நிர்ணய அவையிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் உரைகளாகவும், வினாக்களுக்கு அவர் அளித்த  விடைகளாகவும் அரசுப் பதிவேடுகளிலேயே புதைந்து கிடந்தன.

இவற்றுடன் அவர் எழுதி வெளிவந்த பத்திரிகைக் கட்டுரைகளையும் மொத்தமாகத் திரட்டித் தொகுத்து, 1979 இல் மராட்டிய மாநில அரசு, ஆங்கிலத்தில் 37 தொகுதிகளாக வெளியிட்டது. மராத்தியிலும் இந்த நூல்கள் வெளியிடப்பட்டன.

மத்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், தமிழ்நாட்டில் நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து, இந்த 37 தொகுதிகளையும் தமிழாக்கம் செய்து மராத்தியைப் போன்றே தமிழிலும் 37 தொகுதிகளாக வெளியிட்டது.

இந்த நூல்கள் வெளிவந்து சில பத்தாண்டுகளான நிலையில், அம்பேத்கரின் அனைத்துப் படைப்பாக்கங்களையும் இக்காலச் சூழலுக்கு ஏற்ப பொருள்வாரியான தலைப்பில் எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிற மொழிக் கலப்பின்றி உலக மக்களைச் சென்றடையும் வகையில் வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.

மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள்! 60 புத்தகங்கள், தலா ரூ. 100 விலையில்... தமிழக அரசு திட்டம்!
சிறுபான்மையினர் நலன், மேம்படுத்துவதில் முன்னோடி திமுக: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

புதிய பதிப்பில் அம்பேத்கர் ஆக்கங்களின் முந்தைய தமிழ்ப் பதிப்பில் இடம்பெற்றுள்ள மணிப்பிரவாள மொழிநடையை தற்காலத் தமிழுக்கு ஏற்ப மாற்றியும், படைப்புகளைப் பொருளடைவு, கால முறையில் புதிதாக வகை தொகை செய்தும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ‘அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள்’ என்ற புதிய தலைப்பில் 60 தொகுதிகளாகத் தமிழ் வளர்ச்சித் துறையுடன் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வெளியிட முனைந்துள்ளன.

இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த சூலுர் பாவேந்தர் பேரவைத் தலைவர் புலவர் செந்தலை ந. கவுதமன், எழுத்தாளர், ஆய்வாளர் பேராசிரியர் வீ. அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி, கல்லூரிக் கல்வி இயக்கக மேனாள் துணை இயக்குநர் அ. மதிவாணன், சண்முகம் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அண்மையில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் தலைமையில் நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தில் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான வழிவகைகள் முடிவு செய்யப்பட்டன.

அம்பேத்கர் கருத்துகளின் பொருள் மாறுபாடு தவிர்த்தல்; எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் மொழிநடையில் தகுதிவாய்ந்த மாற்றங்களைச் செய்தல்; இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப மொழிவளத்தை அமைத்தல்; பிறமொழிக் கலப்பினை அகற்றுதல்; உலக மக்களிடம் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றைத் திட்டமிட்டுச் செயலாற்றவும், தொகுதிகளில் இடம்பெறும் அருங்கலைச் சொற்கள் மற்றும் அக்கால வழக்குச் சொற்கள் ஆகியவற்றைத் தொகுதியின் இறுதியில் சேர்க்கப் பெறலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள்! 60 புத்தகங்கள், தலா ரூ. 100 விலையில்... தமிழக அரசு திட்டம்!
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி!

அம்பேத்கரின் ஆக்கங்களில் இதுவரை அச்சில் வெளிவராத, நூல் வடிவில் கிடைக்கப் பெறாத பிற அரிய செய்திகளையும் கண்டறிந்து, அவற்றையும் தொகுத்து, புதிய தொகுதிகளாக வெளியிடவும், அம்பேத்கரின் ஒளிப்படங்களை பல்வேறு பருவங்களின் அடிப்படையில் அமைத்து அந்தந்த தொகுதிகளில் வெளிவரவும், ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள் வரை கொண்டதாக அமையப் பெறும் வகையிலும், அடக்க விலையைவிடக் குறைவான விலையாகத் தொகுதி ஒன்றுக்கு ரூபாய் 100/-க்கு மிகாமல் விலை வைத்து விற்பனை செய்யலாம் எனவும் குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பேத்கருடைய பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் முதல் பத்து புத்தகங்களை வெளியிடுவதென்றும் தொடர்ந்து, அடுத்தடுத்த நூல்களைக் கொண்டுவரத் திட்டமிட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com