சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடர்களை இல்லத்தரசிகள் மட்டும் இல்லாமல் இளம் தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
90களில் பக்தி மற்றும் திகில் தொடர்களை ரசிகர்கள் விரும்பி பார்த்துகொண்டு வந்தனர். அந்த காலகட்டத்தில் ஒளிபரப்பான மாயா மச்சிந்த்ரா, மை டியர் பூதம், ஷகலக பூம் பூம், ஜீபூம்பா, சூலம், வேலன் போன்ற தொடர்கள் குழந்தைகளிடையே அதிகம் பிரபலமானது.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனாமிகா என்ற புதிய திகில் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரின் முன்னோட்ட விடியோ 8 மாதங்களுக்கு முன்னதாக வெளியானது.
இந்த நிலையில், இத்தொடரின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ல் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆகாஷ் பிரேம் குமார் நடிக்கிறார்.
மேலும் அக்ஷதா தேஷ்பாண்டே, தர்ஷக் கெளடா உள்ளிட்டோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
அனாமிகா தொடரின் ஒளிபரப்பு விவரம் குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.