
மக்களுடன் முதல்வர் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள அழைப்பு விடுத்து அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 11-7-2024 அன்று, தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும், 15-7-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, அவற்றைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
அதேபோன்று, அன்றைய நாள் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர் பெருமக்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
இந்நிலையில், மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கும் இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள முதவர், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான 15-7-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில், தான் அதனைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும், அன்றையதினம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
11-7-2024 அன்று விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும்; மேலும் 15-7-2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ள மேற்படி திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக உரிய அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்நிகழ்வுகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும், ஆதரவினை வழங்கிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.