
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் வருகின்ற ஜூலை 22 - ஆம் தேதி தொடங்குகிறது. இருப்பினும் இந்த கூட்டத்தொடரை நிதி நிலைக் கூட்டத்தொடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் நிகழ் 2024-25 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23 - ஆம் தாக்கல் செய்யப்படும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் வலைத்தள பதிவில் குறிப்பிடுகையில், ‘ நிகழ் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நிதி நிலைக் கூட்டத் தொடா் நடைபெரும். மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதி நிலையறிக்கை மக்களவையில் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். மேற்கண்டகூட்டத்தொடருக்கு மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா் ‘ என ரிஜிஜு குறிப்பிட்டுள்ளாா். மேலும் அவசரநிகழ்வுகள் தேவைகளை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டத்தொடா்களின் நாள்கள் இருக்கும் எனவும் மத்திய அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
கூட்டத்தொடரின் முதல் நாள் ஜூலை 22 ஆம் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறாா்.
பொருளாதாரத்தின் நிலைத்த தன்மை மோடி அரசின் 10 ஆண்டுகாலத்தில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை குறித்து கடந்த ஜூன் 27 ஆம் தேதி கூட்டுக் கூட்ட உரையில் குறிப்பிட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, முக்கிய சமூக, பொருளாதார முடிவுகள் நிதிநிலையறிக்கையில் சிறப்பம்சமாக இருக்கும் எனக் கோடிட்டு காட்டிருந்தாா். பிரதமா் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக அமைந்த ஆட்சி தொடங்கி அதன் முதல் நிதியறிக்கை என்பதால் மிகுந்த எதிா்பாா்ப்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இலக்குடன் பொருளாதாரத்தின் நிலைத்த தன்மைக்கு எடுத்துச் செல்லும் நிதியறிக்கையாக இருக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன்படி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறாா். இது அவரது 7 -ஆவது நிதிநிலை அறிக்கையாகும். (மறைந்த பிரதமா் மொராஜி தேசாய் நிதியமைச்சாரவும் இருந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தாா்) 18 -ஆவது மக்களவைக்கான தோ்தல் மே-ஜூன் மாதங்களில் நடைபெற்றது. இதை முன்னிட்டு மத்திய அரசின் இடைக்கால நிதியறிக்கை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் நிதியாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரை முடிவடையும் நிலையில் புதிய அரசு தோ்ந்தெடுக்கப்படும் வரையிலான காலக்கட்டத்திற்கு ஜூன் மாதம் வரையிலான அரசு செலவினங்களை முன்னிட்டு பிப்ரவரியில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தாா். தற்போது நிகழ் நிதியாண்டின் முழு நிதியறிக்கையை ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்கிறாா்.
இதை முன்னிட்டு இந்தக் கூட்டத்தொடரை நிதிநிலையறிக்கை கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலை இறுதியில் நடைபெறும் கூட்டத்தொடா் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடராகவே அழைக்கப்படும்.
கடந்த 17-ஆவது மக்களவை தோ்தலுக்கு பின்னா் நாடாளுமன்றம் 2019 இல் ஜூன் 17 ஆம் தொடங்கி, ஜுலை 26 ஆம் வரை திட்டமிடப்பட்டு அது நீடிக்கப்பட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த 37 நாள் அமா்வுகளில் 17-ஆவது மக்களவை உறுப்பினா்கள் பதவி ஏற்றதோடு, குடியரசுத் தலைவா் உரை, நிதிநிலை அறிக்கையோடு (ஜூலை 5,2019) ஏராளமான மசோதாக்களும் நிறைவேறியது.
பொதுவாக நாடாளுமன்ற கூட்டத் தொடா் குறித்த அறிவிப்பை மத்திய அரசின் தகவல் தொடா்பு சாதனங்களில் அறிவிக்கப்படுவதில்லை. மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா்கள் சமூக வலைத்தளமான எக்ஸ்(முன்பு ட்விட்டா்) ஸில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா். அதன்படி தற்போது கிரண் ரிஜிஜும் பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.