

திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்.
அதனடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகள் 16.92 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
மேலும், திருமலை நாயக்க அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மூன்று கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ 61 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ 3.73 கோடி மதிப்பில் பதிக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிவுக்கு மறுபதிவிட்டு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாவது:
”தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது! சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்! இவற்றைப் போலவே, நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.