சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி: தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுடான சந்திப்பில் பேசுகையில், கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்த கழக வார்டு செயலாளர் பத்மநாதன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது மர்மபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.
பத்மநாதன் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்கலைந்துவிட்டது.
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு கொலை நகரமாக மாறியுள்ளது.
திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, அரசியல் கட்சியினர் தொடர்ந்து கொலை செய்யப்படும் நிலையில் இதனைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாறாக கணக்குக்கு சில கைதுகளைக் காட்டி, அதனை விளம்பரமும் செய்து, தனது வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கைகளால் அரசியல் கொலைகளை கடந்துவிட நினைக்கும் திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயகுமார் கொலை வழக்கில் இதுவரை துப்புத் துலங்கவில்லை.
பத்மநாதன் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் துரிதமாக கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு திறமை இல்லாத அரசாகப் பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். போதைப் பொருள்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக் கூடிய காட்சிகள் தொடர்கிறது. போதைக்கு அடிமையாகி இந்த போதைகளால் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கது.
மாநிலத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சனிக்கிழமை திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதே திமுக மத்தியில் 13 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சியில் இருந்தார்கள். கடந்த 1999 இல் இருந்து ஐந்தாண்டு காலம் மத்திய பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது.
அதன் பிறகு அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையிலும் திமுக இடம் பெற்றிருந்தது. தமிழத்தை சேர்ந்த ஒருவர் நிதியமைச்சராக இருந்தார். அப்போது எவ்வளவு நிதியைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். எவ்வளவு புதிய திட்டத்தைத் தொடங்கினார்கள். அதனால் தமிழகம் எவ்வளவு ஏற்றம் பெற்றது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. திமுக ஆட்சி மீது மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்க திமுக மத்திய அரசின் மீது நிதி குற்றச்சாட்டை வைத்து போராட்டத்தை நடத்தி இருக்கிறது. இதுதான் உண்மை என பழனிசாமி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...