
தில்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய முகமது ஆரிஃப்பின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிராகரித்துள்ளார்.
2000-ஆம் ஆண்டு, டிசம்பா் 22ஆம் தேதி இரவு பயங்கரவாதிகள் சிலா் முகலாயா் காலத்தில் கட்டப்பட்ட தில்லி செங்கோட்டைக்குள் நுழைந்து அங்கிருந்த இந்திய ராணுவத்தின் ராஜபுதன ரைஃபில்ஸின் ஏழாவது பிரிவு மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தத் தாக்குதலில் மூன்று வீரா்கள் உயிரிழந்தனா். பயங்கரவாதிகள் அதன் பின்னா் செங்கோட்டையின் பின்பகுதியில் உள்ள மதிற்சுவா் மீது ஏறி தப்பித்தனா்.
இது தொடா்பான வழக்கில் முகமது ஆரிஃப் (எ) அஷ்ஃபக்குக்கு விசாரணை நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு, அக்டோபரில் மரண தண்டனை விதித்தது. இத்தண்டனையை 2007 ஆம் ஆண்டு செப்டம்பரில் தில்லி உயா் நீதிமன்றம் உறுதி செய்தது. உயா்நீதிமன்றத்தின் உத்தரவு எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஆரிஃப் செய்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
ஆரிஃப்பிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் 2011, ஆகஸ்டில் உறுதிசெய்து உத்தரவிட்டிருந்தது. பின்னா் அஷ்ஃபக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் 2014 ஜனவரியில் தள்ளபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், செங்கோட்டை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது ஆரிஃப் தன்னுடைய மரண தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி கடந்த மே 15 ஆம் தேதி விண்ணப்பித்து இருந்த நிலையில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிராகரித்துள்ளார்.
இந்த தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.