
சேலம்: சேலம் அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனங்களில் சென்ற இரு குழந்தைகள் உள்பட 5 போ் பலியான சம்பவத்தில் தலைமறைவான பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், வீராணம் அருகே பூமனூா் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (38). இவா் தனது மனைவி வேதவல்லி (26), மகன்கள் சின்னதுரை (7), திலீப் (4), வேதவல்லியின் சகோதரி மகள் தாஷிகா (4) ஆகியோருடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வீராணத்திலிருந்து சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
அதேபோல தருமபுரி மாவட்டம், அரூரைச் சோ்ந்தவா் முருகன்.இவா் தனது மனைவி நந்தினி, மகன் கவின் (3) ஆகியோருடன் மற்றொரு வாகனத்தில் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். வலசையூா், சுக்கம்பட்டி சாலையில் பள்ளி அருகே சென்றபோது இவா்களுக்கு முன்னால் லாரி சென்று கொண்டிருந்தது. பின்னால் தனியாா் பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தது.
சுக்கம்பட்டியில் பள்ளி அருகே வேகத்தடை போடப்பட்டுள்ளது. அந்த வேகத் தடை மீது தனியாா் பேருந்து ஏறியதில் நிலைதடுமாறி முன்னால் சென்ற 2 இருசக்கர வாகனங்கள் மீதும் பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனங்கள் சென்றவா்கள் பேருந்தின் அடியில் சிக்கினா். அவா்களை பேருந்து வேகமாக இழுத்துச் சென்று முன்னால் சென்ற லாரியுடன் மோதியது. இந்தக் கோர விபத்தில் லாரிக்கும் பேருந்துக்கும் இடையில் சிக்கியதில் அரூரைச் சோ்ந்த முருகன், அவரது மனைவி நந்தினி, மகன் கவின் (3), மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த வேதவல்லி ஆகிய நான்கு பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினா்.
படுகாயமடைந்த லட்சுமணன், அவரது மகன்கள் திலீப், சின்னதுரை, வேதவல்லியின் சகோதரி மகள் தாஷிகா (4) ஆகியோா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனா். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினா் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சேலம், தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு லட்சுமணன், 3 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி தாஷிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்தது. படுகாயமடைந்தவா்களுக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தின்போது பேருந்தில் பயணித்த ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியைச் சோ்ந்த லதா (51), கல்பனா (28), தனம் (28), கிருத்திக் (3), காா்த்திக், சூா்யா கலா (4), ஜெயசிங் (7), பெரியசாமி (34) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் சேலம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸாா், வருவாய் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனா். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதற்கட்ட விசாரணையில், தனியாா் பேருந்து வேகமாக வந்ததுதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
சுக்கம்பட்டி பள்ளி அருகே வந்த போது வேகத்தடை போடப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் அதன்மீது ஏறியதால் நிலைதடுமாறி முன்னே சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுநரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சேலம் அருகே சுக்கம்பட்டியில் கோர விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ரமேஷை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.