
காதலின் விளைவால் தன்னுடன் பழகிய நண்பனை ஒரே இரவில் பெண்ணாக மாற்றித் திருமணம் செய்துகொள்ளுமாறு ஒருவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முசாபர் நகரைச் சேர்ந்த 20 வயது முஜாஹித் என்ற இளைஞருக்கு அவருடைய அனுமதியில்லாமல், பாலின மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
ஆனால், அந்த இளைஞரின் அனுமதியின் பேரில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பேக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரியில் சஞ்சாக் கிராமத்தை சேர்ந்த முஜாஹித், தன்னுடன் பழகும் ஓம் பிரகாஷ் என்பவர் தன்னை கட்டாயப்படுத்தி பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவப் பணியாளர்கள் அந்த இளைஞருக்கு மயக்க மருந்து கொடுத்து, பின்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஓம்பிரகாஷ் தன்னை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிரட்டி, தொந்தரவு செய்து வந்ததாக முஜாஹித் தெரிவித்தார்.
உடலில் பிரச்னை இருப்பதாகக் கூறி அதற்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொய் சொல்லி ஓம்பிரகாஷ் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் , பின்னர் மருத்துவனையில் மயக்க மருந்து கொடுத்து, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும் முஜாஹித் தெரிவித்தார்.
அவர் தன்னை அழைத்துச் சென்ற நிலையில், மறுநாள் காலை மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக முஜாஹித் தெரிவித்தார். தனக்கு நினைவு திரும்பியபோது, பெண்ணாக மாற்றப்பட்டிருந்ததாகவும் கூறினார்
தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், அதனை செய்ய மறுத்தால் தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று ஓம்பிரகாஷ் மிரட்டியதாகவும் முஜாஹித் கூறினார்.
'நான் உன்னை ஒரு பெண்ணாக மாற்றியுள்ளேன், இப்போது நீ என்னுடன் வாழ வேண்டும். உனக்காக ஒரு வழக்குரைஞரை ஏற்பாடு செய்துள்ளேன் மற்றும் திருமணத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். உன் தந்தையை கொன்றவுடன் சொத்து உன் பெயருக்கு மாறிவிடும், பின்னர் அதை விற்று லக்னௌவுக்கு செல்வோம்,' என்று ஓம்பிரகாஷ் கூறியதாக முஜாஹித் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை எதிர்த்து, ஓம்பிரகாஷ் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, விவசாய சங்கத் தலைவர் ஷியாம் பால் தலைமையில் மருத்துவக் கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் உறுதியளித்தனர்.
முஜாஹித்தின் தந்தை ஜூன் 16 அன்று காவல்துறையில் புகார் அளித்த நிலையில், ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட முஜாஹித்துக்கு குறைந்தபட்சம் ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஷியாம் பால் வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் உடல் உறுப்புக் கடத்தலின் பெரிய பிரச்னையை சுட்டிக்காட்டுகிறது எனவும், அனுமதியின்றி உடலின் முக்கிய உறுப்புகளை அகற்றி மோசடி செய்யும் கும்பல் மருத்துவமனைக்குள் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.