
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு மூலம் வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு பெற்ற 133 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முகமைகள் வாயிலாக அரசுத் துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு மூலம் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற்றது.
இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணி நியமன உத்தரவுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார்.
இதன்மூலம், வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் விவசாய பெருங்குடி மக்களுக்கு விரைவில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்ட தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இப்பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை வெளியிட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கியதற்காக முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்வில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.