திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் கோலாகலம்!
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதன்கிழமை பால்குடம், காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு விழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புஷ்ப அங்கி அலங்காரத்தில் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளுவார். அங்கு சுமார் அரை மணி நேரம் வசந்த உற்சவம் நடைபெற்று சிறப்பு தீபாதாரணை ஆகி சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். வசந்த உற்சவத்தின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் காலை 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தின் அருகே உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பால் காவடி,பன்னீர் காவடி,இளநீர் காவடி,புஷ்ப காவடி எடுத்தும்,அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவையொட்டி,மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து "அரோகரா" கோஷம் எழுப்பினர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பா.சத்யபிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வம், ராமையா, கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.