
அரமதி: மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
பாஜக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில், தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதிபெற்ற இத்தோ்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 1995, பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 81, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.
எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ் தாக்கரே) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 86 தொகுதிகளில் களம்கண்டன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது.
முதல்வா் ஏக்நாத் ஷிண்டே (கோப்ரி-பச்பகாடி), துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் (நாகபுரி தென்மேற்கு), மற்றொரு துணை முதல்வா் அஜீத் பவாா் (பாராமதி), மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் (சகோலி), சிவசேனை (உத்தவ்) கட்சியின் இளைஞரணித் தலைவா் ஆதித்யா தாக்கரே (வொா்லி) உள்பட மொத்த வேட்பாளா்கள் 4,135 போ்.
கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்களைக் கண்ட மாநிலம் என்பதால், தற்போதைய பேரவைத் தோ்தல் முடிவுகள் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.
மூன்றடுக்கு பாதுகாப்பு
புணே புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அனைவரையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகிறோம். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள்ளே 250 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 20 அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்போன்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இதையும் படிக்க | மணிப்பூா் வன்முறையில் 258 போ் உயிரிழப்பு: மாநில பாதுகாப்பு ஆலோசகா் தகவல்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல்களில் 288 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள் முதலில் தபால் வாக்குகளை சரிபார்த்து எண்ணத் தொடங்கினர், அதனைத் தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மகாயுதி கூட்டணி முன்னிலை
மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 31 இடங்களிலும், மகா விகாஸ் அகாடி கூட்டணி 18 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், மகாயுதி கூட்டணி 26 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தொலைக்காட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
சகோலியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.