தொடர் மழையால் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(நவ. 26) காலைமுதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தத் தொடர் மழை காரணமாக நெய்வாசல், தலையாமங்கலம் வாண்டையார் இருப்பு, காட்டூர், கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றுநட்டு சுமார் 30 நாள்களே ஆன இளம் பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது.
வல்லம் வடிகால் வாய்க்காலிலும் மழை நீர் நிரம்பி செல்வதால், தண்ணீர் வடியாமல் விளைநிலங்கள் முழுவதும் கடல் போல் காட்சியளிக்கிறது. விளைநிலங்களா அல்லது ஏரியா என்று தெரியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: மெரீனாவில் கரை ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை!
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு 25,000 வரை செலவு செய்து நடவு செய்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் அடித்து செல்லப்படுவதாகவும், நீரில் மூழ்கி இருப்பதால் தொடர்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, பெய்த மழையினால் பயிர்கள் அழுகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வேளாண் துறை அதிகாரிகள் இப்பகுதியை கணக்கீடு செய்து ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.