புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை கடற்கரைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.
வங்க கடல் நிலை கொண்டுள்ள பெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மிதமான மற்றும் தொடர் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை முதல் வழக்கத்தை விட கடல் அலைகள் சீற்றத்துடன் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கடற்கரைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் கேட்டறிந்தார். அப்போது கடற்கரைக்கு யாரையும் அனுமதிப்பதில்லை என கூறினர்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி சுற்றுலாப் பயணிகள் கடல் அலைகளை ரசிப்பதற்காக புதுச்சேரி வருவதாகவும், எனவே அவர்களை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என அங்கிருந்த காவலர்களிடம் தெரிவித்தார்.தொடர்ந்து கடற்கரையில் நடந்து சென்று கடல் சீற்றத்தை ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பலத்த மழையை எதிா்கொள்ள அனைத்து அரசுத் துறைகளும் தயாா் நிலையிலிருப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
பலத்த மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.