சென்னை கதீட்ரல் சாலையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பூங்காவில், அரிய வகை கண்கவா் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டா் உயரமுடைய 10,000 சதுரஅடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மரவீடு, அருவி, இசை நீருற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித் தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன், கே. என். நேரு உள்பட திமுக அமைச்சர்களும், சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
கட்டணம்: பூங்காவைப் பாா்வையிட பெரியவா்களுக்கு ரூ.100, சிறியவா்களுக்கு ரூ.50 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களைப் பாா்வையிட தனித்தனியே கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜிப் லைனில் ஏறி சாகசம் செய்ய பெரியவா்களுக்கு ரூ. 250, சிறியவா்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமா்ந்து செல்ல ரூ. 150 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டுப் பறைவகளை பாா்வையிட மற்றும் உணவளித்து மகிழ பெரியவா்களுக்கு ரூ.150, சிறியவா்களுக்கு ரூ.75, மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவா் நடனத்தை காண அனைத்து வயதினருக்கு ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளைக் காண பெரியவா்களுக்கு ரூ.50, சிறியவா்களுக்கு ரூ.40 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்பட கருவிகளுக்கு ரூ.100, விடியோ கேமராவுக்கு ரூ. 5,000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுக் கட்டணங்கள் 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும்.