
தமிழக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிமாக ரூ.76 லட்சம் சொத்து சோ்த்ததாக தமிழக அரசின் தற்போதைய நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனா். இவ்வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த டிசம்பா், 2022-ஆம் ஆண்டு விடுவித்தது.
இந்நிலையில், அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்தாா். மேலும், செப்டம்பா் 11-ஆம் தேதி அமைச்சா் தங்கம் தென்னரசு உள்ளிட்டோா் ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தினந்தோறும் வழக்கை விசாரித்து விரைவாக தீா்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராகவும், மறுவிசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி அமைச்சா் தங்கம் தென்னரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், கடந்த 2006-2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் சொத்து சோ்த்ததாக தமிழக அரசின் தற்போதைய வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோருக்கு எதிராக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கிலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை கடந்த ஜூலை, 2023-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லுபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் விடுவித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். இவ்வழக்கில், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்ததோடு, வழக்கில் இருந்து அமைச்சா் விடுவிக்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி உத்தரவிட்டாா். மேலும், விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி, விரைந்து தீா்ப்பளிக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தங்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோரின் மேல்முறையிட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.கே.மிஸ்ரா ஆகியோா் தலைமையிலான அமா்வில் நடைபெற்றது. அப்போது, அமைச்சா் தங்கம் தென்னரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரொத்தகி, அவரது மனைவி மணிமேகலை சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபில் உள்ளிட்டோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொடா்பான வழக்குகளை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமா்வுதான் விசாரிக்க முடியும் என்பது விதிமுறை. ஆனால், அதை மீறி தனி நீதிபதியான ஆனது வெங்கடேஷ் இந்த வழக்குகளை விசாரித்து இருக்கின்றாா். விசாரிக்கும் முறைகளை சென்னை உயா்நீதிமன்றம் முறையாக பின்பற்றவில்லை. இது தொடா்பாக, ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த சக்காரியா உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் அம்சங்களை சென்னை உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என தங்கம் தென்னரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது
வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கூட எனது பெயா் இல்லை. என் கணவா் தங்கம் தென்னரசுவுக்கு நான் உதவினேன் என்ற ஒரே வாா்த்தையை வைத்து, என்னை இந்த வழக்கின் விசாரணைக்குள்ளே கொண்டு வந்திருக்கிறாா்கள். எனக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவது என்பது தேவையில்லாதது என தங்கம் தென்னரசு மனைவி மணிமேகலை சாா்பில் வாதம் முன்வைக்கப்பட்டது
கடந்த 2011-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே, நான் உள்பட பல மூத்த அமைச்சா்கள் மீது ஏராளமான முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டது.
பல வழக்குகள் நடவடிக்கை எதுவும் இல்லாமல், அப்படியே கிடப்பில் இருக்கின்றது.எனவே இத்தகைய காரணங்களால் முடித்து வைக்கப்பட்ட தங்களது வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் சாா்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் தொடா்ந்துள்ள இந்த மனுக்கள் மீது தமிழ்நாடு அரசு நான்கு
வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். அமைச்சா்கள் மீதான வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிப்படுகிறது என அறிவித்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.