
உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமியை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செங்கல்லால் தாக்கிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் உள்பட இரண்டு பேர் சேர்ந்து, 14 வயது தலித் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் குற்றத்தை மறைப்பதற்காக அந்த சிறுமியை செங்கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் பக்ஷிதா கா தலாப் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை நடந்தேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
பக்ஷிதா கா தாலாப் பகுதியில் உள்ள கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். மற்றொரு நபரின் பெயர் கண்டறியப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு 8 மணியளவில் தனியாகச் சென்றுக்கொண்டிருந்த சிறுமியை பின் தொடர்ந்த அவர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து, முட்புதருக்குள் அழைத்துச் சென்றதாக, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் சாதி குறித்து இழிவாகப் பேசியதாக சிறுமி தெரிவித்தார். "அதுமட்டுமின்றி என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலே செங்கல்லைக் கொண்டு தாக்கினார்கள். முதுகில் பலமுறை என்னைத் தாக்கினார்கள். நான் அசைவின்றி இருந்ததால் இறந்ததாக நினைத்து என்னை விட்டுவிட்டார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பித்துச் சென்றார்கள்" என்று சிறுமி மேலும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து சிறுமிக்கு சுய நினைவு திரும்பியவுடன் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
எஸ்சி/எஸ்டி சட்டத்துடன் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல டிசிபி அபிஜித் சங்கர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.