
விழுப்புரம்: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பௌர்ணமி கிரிவலம் செவ்வாய்க்கிழமை (செப்.17) நடைபெறவுள்ளது. இந்த கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக 2 சிறப்பு ரயில்கள் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
விழுப்புரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.17) காலை 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ.எண்.06130) முற்பகல் 11 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இதுபோல, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ.எண்.06131) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். எதிர்வழித்தடத்தில் புதன்கிழமை (செப்.18) அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண் 06132) அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.