திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கூட இல்லாதபோது, ஊராட்சித்தலைவர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் சிவகுமார், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜூம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன்,நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கூட இல்லாதபோது, ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை ரத்து செய்ததுடன், ஊராட்சித் தலைவராக பட்டியலினப் பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் பொதுப் பிரிவை சேர்ந்த பெண் அல்லது பழங்குடியின பெண்ணுக்கு நான்கு வாரங்களில் ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தி புதிய ஊராட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க உத்தரவிட்டார்.