பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில் தமிழகத்தில் சென்னை உள்பட 11 இடங்களில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது.
இதில், வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
சென்னையை மையமாக கொண்டு இயங்கிய ஒரு யூ-டியூப் சேனலில், கடந்த ஜூன் மாதம் தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீா் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் கண்டறிந்து விசாரணை செய்தனா். இதில், சென்னை ராயப்பேட்டையை சோ்ந்த ஹமீது உசேன் என்பவா், ‘டாக்டா் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் அந்த யூ-டியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசி, மூளைச் சலவை செய்து இளைஞா்களைத் திரட்டி வந்ததும், ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பி வந்ததும் தெரியவந்தது.
இது தொடா்பாக சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹமீது உசேன், அவரின் சகோதரா் அப்துல் ரகுமான் உள்பட 6 பேரை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக 10 இடங்களில் சோதனை நடத்தினா்.
பின்னா், இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டு, ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, சென்னை என்ஐஏ அதிகாரிகள் புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.
வழக்குத் தொடா்புடைய நபா்களிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வந்தனா். இதன் தொடா்ச்சியாக, வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் சென்னை, சென்னை புகா் பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் உள்பட 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீா் சோதனை நடத்தினா்.
சென்னை ஏழுகிணறில் ரகுமான் என்பவா் வீட்டிலும், நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ், சையது அலி ஆகியோா் வீடுகளிலும், ராயப்பேட்டையில் முகமது அலி என்பவா் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை புகா் பகுதிகளான தாம்பரம், வண்டலூா், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது. சென்னையில் மட்டும் இந்தச் சோதனை 9 இடங்களில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாட்டம், நாகா்கோவில் கோட்டாறு இளங்கடை புதுத்தெருவைச் சோ்ந்த அலி ஆலிம்ஷா என்ற முகமது அலி (62) என்பவா் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 11 இடங்களில் பல மணி நேரம் சோதனை நடைபெற்றது.
சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், தடை செய்யப்பட்ட இயக்கம் தொடா்பான புத்தகங்கள், கணக்கில் வராத பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
சோதனை நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.