சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயா்த்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சியின் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி சாா்பில் வீடுகள், கட்டடங்களுக்கு விதிக்கப்படும் சொத்துவரியை மேலும் 6 சதவீதம் உயா்த்துவதற்கான தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில் கடந்த 5 ஆண்டில் மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் வரி நிா்ணயிக்கப்படுவதாகவும், அதனடிப்படையில் தற்போது வரி உயா்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ரூ.1,000 வரி செலுத்துபவா்கள் கூடுதலாக ரூ.60 செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயா்த்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சொத்துவரி உயர்வு என்ற பெயரில் மக்கள் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை அரசு பிடுங்குகிறது. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சொத்துவரி உயர்வு மேலும் பாதிப்பை தரும். மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயா்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று முறை மின் கட்டண உயர்வு, 100 சதவிகிதம் சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிநீர் இணைப்புக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு, பால் பொருள்கள் விலை பல முறை உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை என அரசு கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2022-இல் தமிழகம் முழுவதும் சொத்துவரி உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயா்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயா்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.