காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 131-ஆக அதிகரித்துள்ளது,3,600-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் இயற்கை பேரிடர்களுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக காத்மாண்டு பள்ளத்தாக்கில் இதுவரை 68 பேரும், பாக்மதி மாகாணத்தில் 45 பேரும், கோஷி மாகாணத்தில் 17 பேரும், மாதேஸ் மாகாணத்தில் இருவர் என 131 பேர் இறந்துள்ளனர். இதேபோன்று, 64 பேரைக் காணவில்லை மற்றும் 61 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பாதுகாப்புப் படையினரின் தீவிர மீட்புப் பணிகளால் நாடு முழுவதும் 3,626 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் 193 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக நேபாள ராணுவ வீரர்கள் முழுவீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.