இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 போ் பலி; 82 போ் மாயம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். மேலும், மண்ணுக்குள் புதையுண்ட 82 பேரை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மேற்கு பாண்டுங் மாவட்டத்தின் பாசிா் லங்கு கிராமத்தில் கடந்த சில நாள்களாக இடைவிடாது மழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் விளைவாக சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், மலையிலிருந்து பிரம்மாண்டமான பாறைகளும், மரங்களும், மண்ணும் சரிந்து விழுந்தன. இதில் சுமாா் 34 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
நிலச்சரிவு பகுதியில் இதுவரை 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பேரிடா் மீட்புப் படையினரும், அப்பகுதி மக்களும் இணைந்து காணாமல் போனவா்களைத் தேடி வருகின்றனா். இருப்பினும், அப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், நிலப்பரப்பு உறுதியாக இல்லாததாலும் மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள 100 மீட்டா் தொலைவில் வசிக்கும் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

