உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர், தலையில் காயத்துடன் வந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்தபோது, தலைக்குள் ஊசியை தவறுதலாக வைத்துத் தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தலையில் காயமடைந்த சிதாரா என்ற 18 வயதுப் பெண். உடனடியாக அவர், அருகில் உள்ள சமூக நல சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அப்பெண்ணின் தலையில் தையல் போட வேண்டும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அவரும், சுகாதாரப் பணியாளரும் சேர்ந்து அப்பெண்ணிற்கு தலையில் தையல் மற்றும் கட்டுப் போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், கடும் வலியால் துடித்துள்ளார். அப்பெண்ணின் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் காயமடைந்த அப்பகுதியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, ஊசி உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அப்பெண்ணின் தலையில் இருந்து ஊசி அகற்றப்பட்டது.
அரசு நடத்தும் சமூக நல மையத்தின் மருத்துவர், மதுபோதையில் இருந்ததாகவும், மதுபோதையில்தான் காயத்திற்கு தையல் போட்டதாக அப்பெண்ணின் தயார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நாங்கள் இந்த சம்பவத்தை இப்படியே விட்டுவிடப் போவதில்லை என்றும் எங்களுக்கு நடவடிக்கை வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹாபூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், இரண்டு நபர் அடங்கிய குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம், அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மதுபோதையில் அறுவைசிகிச்சை செய்ததாக கூறப்படும் பெண்ணின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு குறித்து மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மாவட்டத்தில் குடித்துவிட்டு பணிபுரியும் மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும், இந்த வழக்கில் மருத்துவர் குடித்திருக்கவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.