திமுகவின் நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது: வானதி சீனிவாசன்

திமுகவின் நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி 
சீனிவாசன்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன்
Published on
Updated on
2 min read

சென்னை: திமுகவின் நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் பேசியதாவது:

பேரவையில் முதல்வர் நீட் தேர்வு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். திராவிட மாடல் அரசு நாடக அரசு என்பதற்கு இன்னும் ஒரு உதாரணமாக இன்றைய அறிப்பை நாங்கள் பார்க்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லி பொய் பிரசாரம் செய்து தமிழக மக்களை திமுக ஏமாற்றி இருக்கிறது.

வெகு தெளிவாக தெரியும் அகில இந்திய அளவில் நீட் தேர்வை அமல்படுத்துவதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாற்றாக தமிழகத்தில் ஏன் நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்தான எந்த வழக்கையும் தாக்கல் செய்யாமல் தமிழகத்திலே அரசியல் வாய்ப்புகளுக்காக இதில் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் வாழ்க்கையைப் பாழ் செய்துவிட்டு அவர்களுடைய உயிர் பறிப்பிலே அரசியல் செய்துவிட்டு இன்று முதல்வர் நாங்கள் கொண்டுவந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு அதற்கு பின்னர் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துகிறேன் என்று கூறுகிறார்.

இத்தனை ஆண்டுகாலம் நீட் தேர்விற்கு எதிராக மிகப்பெரிய ஏமாற்று அரசியலை திமுக மேற்கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம்.

கூட்டாட்சி தத்துவத்தில் என்னென்ன துறைகளில் எல்லாம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கின்றதோ அதைப்பற்றி தெளிவாக தெரிந்திருந்துகூட மக்களை திசை திருப்பும் நோக்கத்தோடு நாங்கள் அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக எத்தனையோ மாணவச் செல்வங்களின் உயிரோடு விளையாடிவிட்டு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

முழுவதுமாக நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றியதற்கு தமிழக மாணவச் செல்வங்களை திசை திருப்பியதற்கு திமுக தலைவர்கள் முதல்வர் உள்பட அத்தனை பேரும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வெட்கப்பட வேண்டும்

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கின்ற அரசியல் முழுக்கத்தோடு இத்தனை ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றியதற்கு இவர்கள் வெட்கப்பட வேண்டும். பாஜக சார்பில் மாநில முதல்வரின் இந்த அறிவிப்பை நாங்கள் மக்களை ஏமாற்றுகின்ற அறிவிப்பாக பார்க்கின்றோம்.

நீட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருக்கின்ற போது மத்திய அரசு இதில் எந்தவொரு விஷயத்தையும் செய்ய முடியாது என்பதை தெளிவாக தெரிந்திருந்தும் இதில் தமிழகத்தின் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது.

கிராமப்புற மாணவர்களின் நலனை பாதுகாக்கின்ற விஷயங்களை அதிமுக செய்தது. ஆனால் அவர்களுடைய கல்விக் கட்டணம், கல்வி உபகரணம் உள்ளிட்ட மற்ற செலவுகளில் போதிய உதவிகள் தற்போது வரை செய்யப்படவில்லை.

ஆனால், இத்தனை ஆண்டுகாலம் நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்து, நீட் தேர்வுக்கான ரகசியம் என்று சொல்லி தமிழக மக்களை வஞ்சித்திருக்கிறது திமுக.

கடந்த வாரம் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு தலைநகரில் ஒரு பிரபலமான யூடியூப்பாளர் அவருடைய வீட்டில் வயதான தாய் முன்பாக அவரை அச்சுறுத்தும் வகையில் அவரது வீட்டில் சாக்கடை நீர், மனிதக் கழிவுகளை கொட்டியிருக்கின்ற சம்பவம் தொடர்பாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் அரசு உள்ளது.

இன்று திரைப்படத்தில் வந்திருக்கும் ஒரு சில காட்சிகளை நீக்குகிறோம் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். அப்போ கருத்து சுதந்திரத்திற்கு இரட்டை வேடமா என்ற கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com